போலீஸ் கைதிகளுடன் வட்டமிட்ட சிபிஐ.. வாட்டி எடுத்த பப்ளிக்..! சாத்தான் குளத்தில் சத்தம்

0 8313

வியாபாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்ட 5 போலீசாரை சாத்தான்குளத்திற்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்ததால், இன்று மாலை 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் அடித்து கொலை செய்ததாக சாத்தான்குளம் போலீசார் 10 பேர் மீது சிபிஐ இரு கொலை வழக்குகளை பதிவு செய்துள்ளது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தபோது சாத்தான் குளத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியுள்ளன.

முதலில் காவலர் முத்துராஜை மட்டும் சிபிஐ அதிகாரிகள் தனியாக விசாரித்தனர் காவல் நிலையத்திற்குள் ஜெயராஜ், பென்னிக்ஸ் அழைத்து வரப்பட்டது முதல் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொண்டனர் என்பதை முத்துராஜ் நடித்துக் காட்டினார். அதனை சி.பி.ஐ.அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கொலை வழக்கில் முதல் 4 குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோரை விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் சாத்தான்குளம் அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள் அவர்களை 5 மணி நேரத்திற்கும் மேலாக வேனில் வைத்தே விசாரணை நடத்தியபடி வலம் வந்தனர்.

இரவில் 5 போலீஸ் கைதிகளையும் சிபிஐ அதிகாரிகள் வேனுடன் அழைத்துச்சென்றனர். பூட்டிக்கிடந்த பென்னிக்ஸ் செல்போன் கடை முன்பு நிறுத்தப்பட்ட வேனில் இருந்தவாறு ஜூன் 19-ந்தேதி இரவு ஜெயராஜை விசாரணைக்காக அழைத்து சென்றது குறித்து 5 பேரும் விவரித்ததாக கூறப்படுகிறது.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த நடுத்தரவயது மதிக்கதக்க நபர் ஒருவர், வேனை விட்டு வெளியே வந்தால் வெட்டுவேன் ... என்று கைதிகளுக்கு எதிராக சத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த நிமிடம் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நிலைமை விபரீதமாகி விடாமல் தவிர்க்க, சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால் அந்த நபரோ கடைசி போலீஸ் வாகனம் அங்கிருந்து செல்லும் வரை ஓங்கி குரல் கொடுத்தபடி கெத்தாக வலம் வந்தார்.

5 போலீஸ் கைதிகளை ஏற்றியபடி வாகனம் நாசரேத் நோக்கி சென்றது. நீண்ட நேரம் கழித்து மீண்டும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சம்பவம் குறித்து நடித்துக் காட்டச்செய்தனர்.

தாங்கள் பணியாற்றிய அதே காவல் நிலையத்தில், கைதிகளாக நடித்து காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் 5 பேரும் தலைகுனிந்தபடியே உள்ளே சென்று வந்தனர்.

சிபிஐ விசாரணையின் போது ரகுகணேஷ் வியர்த்துக் கொட்ட, கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறியதால், காவல் நிலையத்தின் பின்புறம் திறந்தவெளிப் பகுதிக்கு கையைப் பிடித்தபடி அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து நள்ளிரவில் 5 போலீஸ் கைதிகளையும் அழைத்துக் கொண்டு சிபிஐ அதிகாரிகள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

சிபிஐ விசாரணையின் போது, சம்பவம் நடந்த போது காவல் நிலைய எழுத்தர் பியூலாவும் உடன் இருந்ததாக கூறியுள்ளதாக சொல்லப்படுகின்றது. அதன் பேரில் புதன் கிழமை நீண்ட நேரம் பியூலாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் சிபிஐயால் கைது செய்யப்படுவரா ? அல்லது சிபிசிஐடி கூற்றுப்படி சாட்சியாகவே நீடிப்பரா ? என்பது இரு தினங்களில் தெரியவரும் என்று கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments