சாத்தான்குளம் வழக்கு-சிசிடிவி காட்சிகளை மீட்க நடவடிக்கை
சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக காவலில் எடுக்கப்பட்டுள்ள 5 போலீசாரிடமும், சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அழிக்கபட்ட சிசிடிவி காட்சிகளை மீட்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.
சாத்தான்குளம் தந்தை-மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரையும், 16ம் தேதி மாலை 5 மணி வரை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளனர்.
5 போலீசாரையும் மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து, நேற்று முதலே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
ஜெயராஜையும், பென்னிக்சையும் கைது செய்தவரும், கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்க அழைத்து சென்றவருமான காவலர் முத்துராஜை நேற்றிரவே சாத்தான்குளத்துக்கு அழைத்து சென்ற அதிகாரிகள், பென்னிக்சின் கடை உட்பட சம்பவம் நடந்த இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தந்தை-மகனை கைது செய்தது எப்படி என்று காவலர் முத்துராஜை நடித்துக் காட்டுமாறு கூறி வீடியோ பதிவும் செய்த அதிகாரிகள், மீண்டும் மதுரைக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று 2வது நாளாக விசாரணையை துவங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், 5 போலீசாரையும் தனித்தனி அறையில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் 5 போலீசாரையும் சாத்தான்குளத்திற்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சிபிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஜெயராஜ், பென்னிக்ஸ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்ட நிலையில், அவற்றை மீட்கும் பணிகளையும் சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். ஹார்ட் டிஸ்கில் இருந்து அழிக்கப்பட்ட தரவுகளை தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன், மீட்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் காவலர் முத்துராஜ் தவிர்த்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோரை விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் அழைத்து சென்றனர்.
முன்னதாக நேற்றிரவு காவலர் முத்துராஜை மட்டும் சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை நடத்தியிருந்த சிபிஐ அதிகாரிகள், அவரளித்த தகவலின் பேரில் மீதமுள்ளவர்களிடம் காலை முதல் விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பவ இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரிப்பதற்காக 4 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாத்தான்குளத்துக்கு அழைத்து சென்றனர்.
மேலும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கிளை சிறை அதிகாரி, சிறைவாசிகள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.
Comments