ரயில்வேயில் தனியார் - கட்டமைப்பு பணிகள் தீவிரம்
தனியார் நிறுவனங்களுக்கு ரயில்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில். அதற்கான தடங்களை தயார் படுத்தும் பணியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, மங்களூரு, மும்பை, ஹவுரா, டெல்லி ஆகிய நகரங்களுக்கு தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த தடங்களில் தண்டவாளங்கள், பாலங்கள், நடைமேடைகள், குறுகிய வளைவுகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
அது போன்று தண்டவாளங்களின் இருபுறமும் வேலி அமைப்பது, சிக்னல்களை மேம்படுத்தி, வேக கட்டுப்பாடு மற்றும் லெவல் கிராசிங்குகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளயும் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை- கோவை தடம் மட்டுமே இரட்டைத்தடமாக உள்ளது.
சென்னை -கன்னியாகுமரி மார்க்கத்தில் சில பகுதிகள் ஒற்றைத் தடமாக உள்ளது. தனியார் ரயில்கள் ஓடத்துவங்கும் முன் அங்கு இரட்டைதடம் ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த பணிகளும், மேம்பாலங்கள், சப்வேக்கள் ஆகியவற்றை அமைக்கும் பணியும் 2 ஆண்டுகளில் முடிவடையும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
இல்லையெனில் தனியார் ரயில்களும் 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும் நிலை ஏற்படுவதுடன், அதன் விளைவாக ரயில்வே இயக்கும் ரயில்களின் வேகமும் குறையும் என கூறப்படுகிறது.
Comments