ஊரடங்கு காலத்தில் மின் கணக்கீட்டு முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி
ஊரடங்கு காலத்தின் போது, முந்தைய மின் கட்டண தொகையின் அடிப்படையில் புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதில் எந்த சட்ட விரோதமும் இல்லை, நியாயமான முறையிலேயே மின் கணக்கீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட முறையை எதிர்த்து தாக்கலான மனுவின் மீது, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது, பொது மக்கள் கூடுதல் தொகை செலுத்த நிர்பந்திக்கப் படுவதாக கூறி, விளக்க மனு ஒன்றும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என பதிலளித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள்,கொரோனா ஊரடங்கை சமாளிக்க அரசுக்கு நிதி தேவை உள்ள நிலையில், மக்கள் நிலைமையை புரிந்து கொண்டு, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையும், கட்டணங்களையும் முறையாக செலுத்த வேண்டும். மின் கணக்கீட்டை பொறுத்தவரை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட நடைமுறையில் குற்றம் கண்டுபிடிக்க இயலாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Comments