’அடுத்த ஆறு மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கப்போகிறது’ - ரகுராம் ராஜன் எச்சரிக்கை!

0 8387

’கொரோனா ஊரடங்கால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு, அடுத்த ஆறு மாதங்களில் வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்கப்போகிறது. பிரச்னையை அடையாளம் கண்டு முன்கூட்டியே சரிசெய்ய வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்.

பொருளாதார ஆய்வுக்கான தேசியக் கவுன்சில் (NCAER) நடத்திய 2020- ம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார கொள்கைகள் குறித்த மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றினார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன். அவர் மாநாட்டில் பேசியதாவது...

"கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும் ஊரடங்கால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளன. வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. இதனால், அடுத்த ஆறு மாதங்களில் வங்கிகளில் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நாம் மோசமான சூழலில் இருக்கிறோம். விரைவாக இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து தொடக்க நிலையிலேயே நடவடிக்கை எடுப்பது நல்லது.

உதவி தேவைப்படும் மக்களுக்கு நிதி உதவி சென்று சேருவதில்  மிகப்பெரிய சிக்கல் நிலவுகிறது. ஜன்தன் வங்கிக்கணக்கு திட்டம் விளம்பரப்படுத்தும் அளவுக்கு போதுமான அளவு வேலை செய்யவில்லை. இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் மட்டுமே ஆறுதல் அளிக்கும்படி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வேளாண்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் நீண்ட காலத்துக்குப் பேசும்படி இருக்க வேண்டும். பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், தானியங்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய  அரசு அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்கது" என்று கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments