கூட்டம் கூட்டமாக தென்படும் வண்ணத்துப்பூச்சிகள்..!

0 2431

அழகிய வண்ணத்துப்பூச்சிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் தென்பட ஆரம்பித்துள்ளன. ஒரு பகுதியில் பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக தென்பட்டால், அந்த பகுதி செழிப்பாக இருப்பதற்கான அறிகுறி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

கொரோனா ஊரடங்கு காரணமாக, சுற்றுச்சூழலுக்கு சில நன்மைகள் விளைந்துள்ளன. மனித கண்களுக்கு தென்படாமலிருந்த விலங்கினங்கள், பூச்சியினங்களை மீண்டும் காண முடிகிறது. அவற்றில் வண்ணத்துப்பூச்சிகள் முக்கியமானது.

வண்ணத்துப்பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருப்பதோடு, பறவைகளுக்கும் பூச்சியினங்களுக்கும் இரையாக மாறி உணவுச் சங்கிலிக்கும் உதவி புரிகின்றன. தமிழகத்தில் 350 ரக வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அவற்றில் emigrant, dark blue tiger,plain tiger, common mormon ஆகிய வண்ணத்து பூச்சிகளை தமிழகம் முழுவதுமே பரவலாக காண முடியும். வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் தென்பட்டால், அந்த பகுதி செழிப்பாக இருக்கிறது என்று அர்த்தம்.

வண்ணத்துப்பூச்சிகள் இல்லையென்றால், அங்கே சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைந்திருக்கிறது என்றும் எடுத்து கொள்ளலாம். சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க தவறியதன் விளைவாக வண்ணத்துபூச்சிகள் கண்களை விட்டு மறைந்து போய் விட்டன.

கடந்த மாதத்தில் கோவை மாவட்டம் நரசிபுரம் பகுதியில் எமிகிரண்ட் ரக மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள் தென்பட்டதால் ,சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உற்சாகமடைந்தனர்.

கோவையை அடுத்து சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திலும் வண்ணத்துப்பூச்சிகள் தற்போது தென்படத் தொடங்கியிருக்கின்றன. சத்தியமங்கலத்தில் தென்படும் வண்ணத்துப்பூச்சிகள் டார்க் ப்ளு டைகர் ரகத்தைச் சேர்ந்தவை. வண்ணத்துப்பூச்சிகளும் யானைகள் போல கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வது உண்டு.

ஆனால், வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஆயுள் கெட்டி இல்லை என்பதுதான் சற்று சோகமான விஷயம். சிறிய ரக வண்ணத்துப்பூச்சிகள் 2 முதல் 4 வாரங்கள் வரையும், பெரிய ரக வண்ணத்துப்பூச்சிகள் 9 மாத காலம் வரையும் மட்டுமே வாழும் தன்மையுடயவை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments