அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்

0 3852
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7 புள்ளி 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜ் மற்றும் சில காரணங்களால் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், நிலோபர் கபீல் ஆகியோர் பங்கேற்கவில்லை.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவில் இருந்து வருவதை கருத்தில் கொண்டு, மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

10 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, தனது பரிந்துரையை முதலமைச்சரிடம் ஏற்கனவே சமர்ப்பித்து இருந்தது. அந்த அறிக்கையை தீர ஆராய்ந்த, தமிழக அரசு, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று, பிறகு அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து, விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடப்பு கல்வியாண்டிலேயே 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதன் மூலம், மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 150-க்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments