மருந்தகங்களில் பாராசிட்டமால் விற்க தடை இல்லை..!
பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி வழங்கக் கூடாது என மருந்தகங்களுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் விதி 123ன் படி, K அட்டவணையின் கீழ் வரும் பொருட்களை வீட்டு உபயோகத்திற்காக வாங்கி வைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வலி மற்றும் காய்ச்சல் நிவாரணியாக பயன்படும் பாரசிட்டமால் மாத்திரையும் K அட்டவணையில் வருவதால், மருத்துவர்களின் பரிந்துரை இன்றி வாங்கி பயன்படுத்தலாம் என மனுதாரர் கூறியுள்ளார். கொரோனா அல்லாத காய்ச்சல்களால் பாதிக்கப்படும்போது, மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலையில், பாரசிட்டமால் மருந்தே கைகொடுப்பதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், மருத்துவர்களின் பரிந்துரை இன்றி, மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்தால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாய்மொழியாக அரசு எச்சரித்துள்ளது என கூறப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், கொரோனா அல்லாத காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என மனுதாரர் முறையிட்டுள்ளார். பாரசிட்டமால் மருந்து வாங்குபவர்களை சுகாதாரத் துறையினர் அழைத்துச் சென்று தனிமை முகாம்களில் வைக்கின்றனர், இதனால் முறையான மருத்துவ வசதி தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு, தேவையான படுக்கை உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதில்லை என மனுதாரர் புகார் கூறியுள்ளார்.
எனவே, பாரசிட்டமால் மாத்திரைகள் மருந்தகங்களில் தடையின்றி வழங்கவும், எவ்வித தட்டுப்பாடுமின்றி பாரசிட்டமால் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிடமாறு மனுதாரர் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,
பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி வழங்கக் கூடாது என்பது போன்ற உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Comments