ராஜஸ்தான் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்...

0 3972

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டிடம் இருந்து, துணை முதலமைச்சர் பதவியும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் பெரும்பான்மை பலத்துடன், காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் இடையே அதிகாரப் போட்டி இருந்து வந்தது. அரசைச் சீர்குலைக்க முயற்சி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சச்சின் பைலட்டுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விவகாரத்தால், இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது.

தனக்கு 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், அசோக் கெலாட் தலைமையிலான அரசு சிறுபான்மை அரசாக மாறிவிட்டது என வெளிப்படையாக அறிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தின் ஜோதிராதித்ய சிந்தியா பாணியில், சச்சின் பைலட்டும், பாஜகவில் இணையப் போகிறார் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கவிழக்கூடும் என்றும் ஊகத் தகவல்கள் வெளியாகின. அதேசமயம், சச்சின் பைலட்டை சமரசம் செய்ய டெல்லி காங்கிரஸ் தலைமை முயற்சி மேற்கொண்டதாகவும், முதலமைச்சர் பதவிக்கு குறைவான எதற்கும் இறங்கி வர முடியாது என சச்சின் பைலட் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்களான 2 அமைச்சர்கள் உள்ளிட்ட சிலரும் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெய்ப்பூர் ஹோட்டலில் இன்று நடைபெற்ற கூட்டத்திலும் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. எனவே அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்தும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட்டை நீக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை, எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரான ரண்தீப் சுர்ஜிவாலா அறிவித்தார். சச்சின் பைலட் ஆதரவு அமைச்சர்களான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனாவும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மாநில கல்வித்துறை இணையமைச்சரான Govind Singh Dotasra, ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, முதலமைச்சர் அசோக் கெலாட், ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அடுத்து, முதலமைச்சர் அசோக் கெலாட், சட்டமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிப்பதே இனி இருக்கும் ஒரே வழி என்று பாஜக கூறியுள்ளது. நேற்று நடந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்குப் பிறகு தமக்கு 106 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அசோக் கெலாட் தெரிவித்தார். ஆனால் இன்று காலை மேலும் சில எம்எல்ஏக்கள் அணி மாறியதை அடுத்து இந்த எண்ணிக்கை 100 ஆக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

அசோக் கெலாட்டுக்கு 95 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளதாக சச்சின் பைலட் கூறுகிறார். 200 உறுப்பினர்கள் உள்ள ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 101 பேர் தேவை என்பதால், அவையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அசோக் கெலாட்டுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரை, அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு, முதலமைச்சர் அசோக் கெலாட் அளித்த பரிந்துரையை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஏற்றுக் கொண்டார்.

 

ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், எதிர்க்கட்சியான பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு, சதித் திட்டம் தீட்டி வருவதாகக் குற்றம்சாட்டினார். சச்சின் பைலட் கையில் எதுவும் இல்லை என்றும், பாஜகவே அனைத்து நாடகத்தையும் அரங்கேற்றுவதாகவும், மத்தியப் பிரதேசத்தில் வேலை செய்த அதே பாஜக டீம் ராஜஸ்தானிலும் வேலை செய்வதாக கெலாட் குறிப்பிட்டார். வேறு வழியின்றியே சச்சின் பைலட் மீது, கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்ததாகவும் அசோக் கெலாட் தெரிவித்தார்.

 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா, காங்கிரஸ் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அந்த ஆட்சியை எந்த சக்தியாலும் காப்பாற்ற இயலாது என்றும் தெரிவித்துள்ளார். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், சூழ்நிலைக்கேற்ப தங்களது வியூகம் அமையும் என்றும் சதீஷ் பூனியா கூறியுள்ளார்.

 

இதனிடையே, தமது ட்விட்டர் பக்கத்தில், ராஜஸ்தான் துணை முதலமைச்சர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற குறிப்புகளை சச்சின் பைலட் நீக்கியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments