இந்தியாவுக்குப் பேரிழப்பு - கை நழுவியது ஈரானின் 'சாபகர்’ துறைமுக ரயில் பாதைத் திட்டம்

0 19624
சாபகர் துறைமுகம்

ரான், சாபகர் துறைமுக ரயில்வே திட்ட ஒப்பந்தத்திலிருந்து இந்தியாவை நீக்குவதாக அறிவித்துள்ளது ஈரான் அரசு. ராஜதந்திர ரீதியிலும் பொருளாதரா ரீதியிலும் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பாகவே இது கருதப்படுகிறது.

ஈரானின் முக்கியத் துறைமுகம் சாபகர் ( Chabahar). ஈரான் - ஆப்கானிஸ்தான் இடையே வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில், ஈரானின் சாபகரிலிருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஜாஹேடன் வரை சுமார் 628 கி.மீ தொலைவுக்கு இந்தியா சார்பில் ரயில்வே பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே 2016 - ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய அரசின் நிதி உதவியுடன், மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் மூலம் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று இந்தியா கூறியது.

image

'ஒப்பந்தம் கையெழுத்தாகி, நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும்  இந்தியா எந்தவிதமான கட்டுமானப்  பணிகளையும் தொடங்கவில்லை. இனி நாங்களே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொள்கிறோம். இந்தத் திட்டத்தை 2022 - ம் ஆண்டுக்குள் ஈரானின் தேசிய மேம்பாட்டு நிதியிலிருந்து 400 மில்லியன் டாலர் செலவில் செய்து முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்"  என்று கூறி இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ஈரான் அரசு ரத்து செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதித்ததால், இந்தியாவில் எந்தவித பணியையும் தொடங்க  முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பொருளாதாரத் தடையால் இந்தியா ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதையும் குறைத்துக்கொண்டது. இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருவதை ஈரான் விரும்பவில்லை. இதனால் கோபமான ஈரான் சாபகர் ரயில் பாதைத் திட்டத்தை ரத்து செய்துள்ளது.

இந்திய ரயில்வே ஒப்பந்தம் ரத்து செய்திருப்பதன் பின்னணியில் சீனா இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவுடன் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ஈரான் இறுதி செய்துள்ள நிலையில் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் நிதியுதவியோடு பாகிஸ்தானில் உருவாகி வரும் குவாடர் துறைமுகத்தில் இருந்து 72 கி.மீ. தூரத்தில்தான் சபாகர் துறைமுகம் உள்ளது. இதனாலேயே இந்தியாவைப் பொருத்தவரை பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது சபாகர் துறைமுகம். இந்தத் துறைமுகப் பணியும் தற்போது இந்தியாவின் கையைவிட்டு நழுவியிருப்பது இந்தியாவுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகவே கருதப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments