ஹவாலா பரிமாற்றம், தீவிரவாத தொடர்பு: தங்க கடத்தலில் அவிழும் முடிச்சுகள்!
கேரளத்தில் கொடுவல்லி என்ற பகுதியை மையமாக வைத்தே, தங்க கடத்தல் நிகழ்ந்துள்ளதாகவும், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஹவாலா பணப் பரிமாற்றத்துடன், சுமார் 100 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது என்றும் அம்மாநில போலீசார் கூறியுள்ளனர். தங்க கடத்தலின் பின்னணியில், தீவிரவாத குழுக்கள் இருப்பதாகவும் என்ஐஏவுக்கு அளித்த அறிக்கையில் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் வழக்கில் ஸ்வபனாவும், கூட்டாளி சந்தீப் நாயரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி திரட்டிய விவரங்களை கேரள போலீசார், என்ஐஏவுக்கு அறிக்கையாக அளித்துள்ளனர். கேரளத்தில் தங்க ஆபரணங்கள் விற்பனையின் கேந்திரமாகத் திகழும் கொடுவல்லியை மையமாக வைத்தே, தங்க கடத்தல் நிகழ்ந்துள்ளதாக அதில் கேரள போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கொடுவல்லியில் சுங்கத்துறை ரெய்டு நடத்தப்பட்டதாகவும், கோழிக்கோட்டில் வணிகம் செய்யும் வள்ளிக்காடு ஷபி ஹாஜி என்பவர் வீட்டில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்தீப் நாயருடன், வள்ளிக்காடு ஷபி ஹாஜி மகனுக்கு தொடர்பிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஹவாலா பணப் பரிமாற்றத்துடன், கொடுவல்லியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுமார் 100 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது என்று, என்ஐஏ-வுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் தங்க கடத்தலில், பெண்களும், சிறார்களும்கூட ஈடுபடுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தங்க கடத்தலின் பின்னணியில், மதவாத தீவிரவாத குழுக்கள் இருப்பதாகவும், கடத்தல் தங்கம் மற்றும் ஹவாலா பணம் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கேரள போலீசார் கூறியுள்ளனர்.
Comments