சாத்தான்குளம் இரட்டை கொலை.. 5 பேரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு..!

0 2543

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கை கொலை வழக்காக சிபிஐ மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை கையில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சாத்தான்குளம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நெல்லை வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ ஏடிஎஸ்பி விகே சுக்லா உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகளை, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு சந்தித்தது. அப்போது, சிசிடிவி டிஸ்க் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சிபிஐ வசம் அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக வழக்கு தொடர்பான விசாரணைக்காக, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதியிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனு மீது செவ்வாய்கிழமை விசாரணை நடைபெறும் என கூறினார். மேலும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 5 பேரையும் செவ்வாயன்று குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சந்தேக மரணம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை சிபிஐ கொலை வழக்காக மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதல்குற்றவாளியாக உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ், 4ஆம் குற்றவாளியாக ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பதாக சிபிஐ வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கொலை உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த இருவரில் ஸ்ரீதர் தரப்பில் மனு வாபஸ் பெறப்பட்டது. உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments