சொப்பன சுந்தரியாக வலம் வந்த ஸ்வர்ண கடத்தல் ராணி..! எம்.பியின் உறவினர் கைது

0 12844

அரபு நாடுகளில் இருந்து தங்க கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னாவின் தங்க கடத்தலுக்கு உதவிய எம்.பியின் உறவினர் ஒருவர் சிக்கியுள்ளார். துபாயில் பிறந்த ஸ்வர்ண ராணி ஸ்வப்னா 3 திருமணங்கள் செய்து கொண்டு, அரசியல் பிரமுகர்கள் ஆதரவால் சொப்பன சுந்தரியாக வலம் வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அரபு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் கேரளாவின் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமார் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதால் வழக்கு விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

தங்க கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தூதரக நிர்வாக செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், அவரது கூட்டாளி சந்தீப் நாயர் ஆகியோரை கடந்த சனிக்கிழமை பெங்களூரில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

ஸ்வப்னாவிடம் என்.ஐ.ஏ நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஸ்வர்ண ராணி ஸ்வப்னா, அரசியல் பிரமுகர்கள் ஆதரவுடன் சொப்பன சுந்தரியாக வலம் வந்த திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் ஸ்வப்னா பிறந்து வளர்ந்தது எல்லாம் துபாயில் என்று கூறப்படுகின்றது. அங்கு 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் உறவுக்கார இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை பெற்றோர் கண்டித்த நிலையில் அவருக்கு புத்தி சொல்ல வந்த பாதிரியாருடன் பழக்கம் ஏற்பட்டு மும்பைக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. பெற்றோர் மும்பை வந்து பாதிரியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஸ்வப்னாவை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஸ்வப்னாவின் காதல் ஓட்டத்தை நிறுத்த துபாயில் இருந்து திருவனந்தபுரம் திரும்பிய பெற்றோர் ஸ்வப்னாவை, முன்னாள் மேயர் ஒருவரின் உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஒரு மகள் பிறந்த நிலையில் அவருடனான உறவை முறித்துக் கொண்டு மகளுடன் கோவையில் குடியேறிய ஸ்வப்னா, அங்கு மது பார் உரிமையாளரை 2 வதாக திருமணம் செய்துள்ளார்.

அவருடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து மீண்டும் திருவனந்தபுரம் சென்ற ஸ்வப்னா, அங்கு 3 வதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் தான் அரசியல் பிரமுகர்கள் ஆதரவு, துபாயில் உள்ள சில அதிகாரிகளின் சிபாரிசின் பேரில் ஸ்வப்னாவுக்கு தூதரகத்தில் முக்கிய பணி கிடைத்துள்ளது.

இதன் மூலம் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என ஏராளமானவர்களுடன் ஸ்வப்னாவுக்கு நட்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி தான் அரபு நாடுகளில் இருந்து ஸ்வப்னா தைரியமாக தங்க கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. மேலும் கேரளாவில் இருந்து உடல் முழுவதும் மறைக்கும் கருப்பு ஆடை அணிந்து கொண்டு கர்ப்பிணியாக நடித்து பெங்களூருக்கு தப்பிச்சென்றதும் தெரியவந்துள்ளது.

ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர்.

அந்த மனுவில் தங்க கடத்தலுக்கு காரண கர்த்தாவாக செயல்பட்ட ஸ்வப்னாவுக்கு கேரளாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், வெளிநாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் , கேரள தொழில் அதிபர்கள் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் 8 நாள் என்.ஐ.ஏ காவலில் விசாரிக்க அனுமதி வழக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களை காவலில் எடுத்து தங்க கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்க்கிடையே ஸ்வப்னாவுக்கு நன்கு அறிமுகமான கேரள எம்.பி ஒருவரின் உறவினரான மலப்புரத்தை சேர்ந்த ரமீஸ் என்பவரை தங்க கடத்தல் தொடர்பாக சுங்க இலாக்காவினர் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவரை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதே நேரத்தில் தங்க கடத்தல் சம்பவத்தில் கேரளாவின் ஆளும் பிணராய் விஜயன் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments