கோவில் நிர்வாக உரிமை அரச குடும்பத்துக்கே சொந்தம்
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கே உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் மரபுவழி அறங்காவலராகத் திருவிதாங்கூர் அரச குடும்பம் உள்ளது. அந்த நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டதால் கோவிலின் நிர்வாகத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக் கூறி 2011ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்துத் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மார்த்தாண்ட வர்மன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதையடுத்து 2011 மே மாதத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
கோவிலை நிர்வகிக்க மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது. கோவிலின் நிலவறையில் உள்ள தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட விலையுயர்ந்த செல்வங்களைக் கணக்கெடுப்பதற்காக வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் ஆகியோரை நியமித்தது.
இந்தக் குழு 6 நிலவறைகளில் 5 அறைகளைத் திறந்து நகைகளைக் கணக்கெடுத்துத் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைத்தது. ஆறாவது அறையைத் திறந்தால் துன்பங்கள் நேரிடலாம் என சாபம் உள்ளதால் அதைப் பல காலமாகத் திறப்பதில்லை என அரச குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து அறிக்கை அளித்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் கடந்த காலங்களில் பல முறை ஆறாவது அறை திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கே உள்ளது எனத் தெரிவித்தனர்.
கோவிலை நிர்வகிக்க அரச குடும்பத்தின் சார்பில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், அதுவரை இடைக்கால ஏற்பாடாக மாவட்ட நீதிபதி தலைமையில் உச்சநீதிமன்றம் அமைத்த குழு நிர்வகிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கோவிலின் ஆறாவது நிலவறையைத் திறப்பது குறித்து அரச குடும்பத்தால் அமைக்கப்படும் குழு ஏற்கெனவே உள்ள மரபுப்படி தீர்மானிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
1949ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்துடன் திருவாங்கூர் சமஸ்தானத்தை இணைக்க மன்னரும், இந்திய அரசின் பிரதிநிதியும் ஓர் உடன்பாடு செய்துகொண்டனர்.
அந்த உடன்பாட்டின் ஏழாவது விதிமுறையில், பத்மநாப சுவாமி கோவிலின் நிர்வாகத்தை நடத்துவது பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அதில் கோவிலை நிர்வாகம் செய்யவும் மேற்பார்வையிடவும் அரச குடும்பத்தின் சார்பில் செயல் அலுவலர் ஒருவரை நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
Comments