நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு... எம்.எல்.ஏ. உள்பட 13 பேர் சிறையில் அடைப்பு
திருப்போரூர் அருகே கோவில் நில ஆக்கிரமிப்புத் தொடர்பான மோதலின் போது, தந்தையை அரிவாளால் வெட்டியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 11 பேரும் எதிர்தரப்பைச் சேர்ந்த நபரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செங்காடு கிராமத்தில் அமமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான குமார், தனது நிலத்துக்கு பாதை அமைக்க கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூலிப்படையினரை அழைத்து வந்து பாதை அமைக்க முயன்ற குமாரை, திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி தட்டிக் கேட்டதாகவும் இதில் வாக்குவாதம் முற்றியதாக சொல்லப்படும் நிலையில், கூலிப்படையினர் தாக்கியதில் எம்.எல்.ஏவின் தந்தை உள்ளிட்ட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாக சொல்லப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் கூலிப்படையினர் தப்பி ஓடினர். அவ்வழியாக சென்ற கீரை வியாபாரி சீனிவாசன் என்பவர் மீது துப்பாக்கி குண்டு உரசி சென்றதில் காயமடைந்தார்.
மேலும் கூலிப்படையினர் விட்டு சென்ற இருசக்கர வாகனங்களை எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்டோர் மீது ஆயுத தடைச் சட்டம், கொலை முயற்சி, குழு மோதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
துப்பாக்கிகளுக்கு உரிமம் புதுப்பிக்கப்படாமல் காலாவதியானது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, மேடவாக்கத்துக்கு சென்று பதுங்கியிருந்த எம்.எல்.ஏ இதயவர்மனை கைது செய்தனர். அதன் பிறகு குற்றவியியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி காயத்திரி தேவி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட எம்எல்ஏவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
இதனிடையே அவரது சகோதரர் நிர்மல், மைத்துனர் வசந்த், யுவராஜ், ஓட்டுனர் கந்தன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் 11 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதே போல், எதிர்தரப்பை சேர்ந்த, அமமுக பிரமுகர் குமாரும் கைது செய்யப்பட்டார்.
Comments