துணை முதலமைச்சர் போர்க்கொடி : ராஜஸ்தான் காங். அரசு தப்புமா ?
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி, அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள துணை முதலமைச்சர் சச்சின் பைலட், பாஜகவில் சேரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில், பெரும்பான்மை பலத்திற்கு 101 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, 122 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.
107 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 10 சுயேச்சைகள், மேலும் 3 சுயேச்சைகளின் ஆதரவும் காங்கிரஸ் பக்கம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதேபோல சிறிய கட்சிகளை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் என மொத்தம் 122 எம்எல்ஏக்களின் ஆதரவு காங்கிரசுக்கு உள்ளது.
72 எம்எல்ஏக்களை பெற்றுள்ள பாஜகவுக்கு, 3 எம்எல்ஏக்களை கொண்ட ஆர்எல்பி என்ற மற்றொரு சிறிய கட்சியின் ஆதரவு உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக நீறுபூத்த நெருப்பாக இருந்த அதிகார மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது.
மாநில அரசை சீர்குலைக்க முயன்ற புகார் தொடர்பான விசாரணையில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள சச்சின் பைலட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பாஜக உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், தனக்கும் கூட சம்மன் அனுப்பப்பட்டதாகவும் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியபோதும், சச்சின் பைலட் தரப்பை அமைதிப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து, தனக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி, சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அசோக் கெலாட் தலைமையிலான அரசு, தற்போது சிறுபான்மை அரசாகி விட்டதாகவும், இன்று நடைபெற்று வரும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்றும் அவர் அறிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதில் முக்கிய கருவியாக செயல்பட்டு, பின்னர் பாஜகவில் சேர்ந்த இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா போலவே, சச்சின் பைலட்டும், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணையப் போவதாகக் கூறப்பட்டது.
இதற்கேற்ப சச்சின் பைலட்டும் ஆதரவாளர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். ஆனால் தாம் பாஜகவில் சேரப்போவதில்லை என சச்சின் பைலட் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக 109 எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதத்தை பெற்றுள்ளதாக, ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே இன்று அதிகாலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜெய்ப்பூரில், முதலமைச்சர் அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 90க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments