மேற்குவங்க பாஜக எம்எல்ஏ மர்ம மரணம்.. உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெடுப்பு..!
மேற்குவங்க மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தேபேந்திரநாத் ரே உடல் அவர் வீட்டருகே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தின் ஹேம்தாபாத் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் தேபேந்திரநாத் ரே, நள்ளிரவு ஒருமணிக்கு யாரோ செல்பேசியில் அழைத்ததை அடுத்து வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அவரைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மீண்டும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, ஒரு தேநீர்க் கடை முன் அவர் உடல் தூக்கில் தொங்கியபடி கிடந்தது. அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், யாரோ அடித்துக் கொன்று தூக்கிலிட்டு விட்டதாகவும் குடும்பத்தினரும் பாஜகவினரும் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
2016ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தேவேந்திரநாத் ரே கடந்த ஆண்டு பாஜகவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இந்த மர்ம மரணத்தைக் கண்டித்துள்ளதுடன், மம்தா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவையே இது காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Comments