திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை உள்ளது - உச்சநீதிமன்றம்
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கே உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் மரபுவழி அறங்காவலராகத் திருவிதாங்கூர் அரச குடும்பம் உள்ளது. அந்த நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டதால் கோவிலின் நிர்வாகத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக் கூறி 2011ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மார்த்தாண்ட வர்மன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதையடுத்து 2011 மே மாதத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
கோவிலின் நிலவறையில் உள்ள தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட விலையுயர்ந்த செல்வங்களைக் கணக்கெடுப்பதற்காக வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் ஆகியோரை நியமித்தது.
இந்தக் குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைத்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள் லலித், இந்து மல்கோத்ரா அமர்வு ஏப்ரல் பத்தாம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கே உள்ளது எனத் தெரிவித்தனர். கோவில் விவகாரங்களை நிர்வகிக்கத் திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Comments