காய்கறி சந்தையை மீண்டும் கோயம்பேடுக்கு மாற்றக் கோரி முதலமைச்சரிடம் மனு
சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக, நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தவறினால், வரும் 16ஆம் தேதி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
கொரானா பரவலின் மையமாக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, திருமழிசை பகுதியில் காய்கறி சந்தை, போதிய வசதிகள் இல்லாமல், சுகாதரமற்ற நிலையில், சேறும் சகதியுமாக, வாகனங்கள் சென்றுவர முடியாத அளவிற்கு உள்ளது என்றார்.
சுகாதார சீர்கேட்டால் திருமழிசை சந்தை வியாபாரிகள் கொரோனா அச்சத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வாகனத்தில் செல்வோர் மட்டுமே திருமழிசை சென்று காய்கறி வாங்க முடியும் நிலை உள்ளதால், காய்கறிகள் தேக்கமடைந்து அழுகி வீணாகும் நிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.
கோயம்பேட்டிற்கு மொத்த சந்தையை மாற்றாத பட்சத்தில் காய்கறிகள், மளிகை பெருட்கள் விலை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டால், அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் விக்கிரமராஜா கூறினார்.
Comments