தளர்வற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் தீவிரமாக அமல்
தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், இம்மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் செயல்படுகின்றன. காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை சென்ட்ரல் பகுதியில் ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகரிலும் முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும் சோதித்து அனுப்பி வருகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட பணிகள் அல்லாமல் தேவையின்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாரிமுனை பகுதியில் சாலையில் தேவையின்றி நடந்து சென்றவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
சேலம் மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற ஒரு நாள் முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மளிகை காய்கறிக் கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. வாகனங்களில் வந்த ஒருசிலரைக் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி சந்திப்பு பகுதிகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தூத்துக்குடி, கோவில்பட்டி, திருவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களில் மளிகை காய்கறிக் கடைகள், சந்தைகள், இறைச்சிக் கடைகள் ஆகியன மூடப்பட்டுள்ளன. சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கரூரில் ஜவகர் பஜார், கோவை சாலை, செங்குந்த புரம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைச் சந்திப்புகள், இணைப்புச் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. நகரின் முதன்மையான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை, நாகப்பட்டினம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனப் போக்குவரத்து இல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற ஒரு நாள் முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் வகையில், ஆயிரத்து 500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. குன்றத்தூர், மாங்காடு, திருப்பெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. முதன்மையான சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்திலும் 2வது ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, சாலைகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
திருப்பூரில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளிலும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, தேவையின்றி வெளியே சுற்றித்திரிவோருக்கு 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. தமிழகம்-கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. சரக்கு போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் முழு ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து இன்றிச் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பால்கடை, மருந்துக் கடை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
விருதுநகரில் முழு ஊரடங்கால் எண்ணெய், பருப்பு ஆலைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தீப்பெட்டி, பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன. திருவில்லிப்புத்தூரிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. சாலையில் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இராசபாளையத்தில் முழு ஊரடங்கால் மருந்துக்கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
விழுப்புரத்தில் காந்தி சாலை, பாகர்ஷா வீதி, புதுச்சேரி சாலை ஆகிய இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. திண்டிவனத்தில் ஒருசில இடங்களில் மீன்கடைகள் திறந்திருந்த நிலையில் காவல்துறையினர் எச்சரித்ததால் மூடப்பட்டன. விக்கிரவாண்டி சோதனைச்சாவடியில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. செஞ்சியில் ஒரு ஆட்டோவில் 8 பேர் வந்ததால் அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூரில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுச் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அமைதி நிலவுகிறது. மருந்தகங்களும் பால் விற்பனை நிலையங்களும் திறந்திருந்தன.
திருவாரூர் மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காரணமாக காய்கறி, மளிகைக் கடைகள் உட்பட அனைத்து அத்தியாவசிய கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் பழைய பேருந்து நிலையம், கடைத்தெரு உட்பட அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அநாவசியமாக வாகனங்களில் வெளியே சுற்றித்திரிவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. தேவையின்றி வெளியே வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
முழு ஊரடங்கை முன்னிட்டு திருப்பூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சந்திப்புகள், 35க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் போலீசார் முறையான ஆவணங்கள், அடையாள அட்டைகள் இன்றியும் முறையற்ற காரணங்களுடனும் வாகனங்களில் வந்தவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
Comments