இது தான் உங்கள் டக்கா ? கிராமங்களில் மந்தநிலையில் கொரோனா தடுப்பு பணிகள்..! சமூக பரவல் தடுக்கபடுமா ?
கும்பகோணம் அருகே கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் பேத்தி டியூசனுக்கு சென்ற வீட்டில் கணவன், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அங்கு படித்த மற்ற மாணவர்களுக்கு 4 நாட்களாகியும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாததால் மேலும் நோய்பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் பக்தபுரி தெருவைச் சேர்ந்த பிரபல பெண் மருத்துவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டு கடந்த 6 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து டாக்டரின் மருமகள், பேரன் மற்றும் பேத்திக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் டாக்டரின் பேத்தி பெரும்பாண்டி பஞ்சாயத்தில் உள்ள ஆசிரியை ஒருவரிடம் டியூஷன் சென்று வந்துள்ளார். ஆசிரியைக்கு நடத்தப்பட்ட சோதனையில் டியூஷன் பயிற்றுவித்த ஆசிரியைக்கும், அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, அவர் வசித்த சித்தி விநாயகர் தெரு தடை செய்யப்பபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பெயருக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதையும் சரியாக செய்யவில்லை.
கொரோனா பாதிக்கப்பட்ட சிறுமிக்கு டியூசன் எடுத்த வீடு அமைந்துள்ள பெரும்பாண்டி சகாஜி நாயக்கன் தோப்பு பகுதியில் கிருமி நாசினியும் தெளிக்கப்படவில்லை, அந்த சிறுமியுடன் டியூசன் படித்த மற்ற மாணவ, மாணவிகளின் விவரத்தை சேகரித்து கொரோனா பரிசோதனை ஏதும் நடத்தப்படவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் ஒருவர் கூட உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வரவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால் கும்பகோணம் நகராட்சி ஆணையர் நோய் தொற்று குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியும் பெரும்பாண்டி கிராம பஞ்சாயத்தை கவனிக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
நகர் புறங்களில் காட்டும் வேகத்தை சுகாதாரத்துறையினர் கிராமப்புறங்களில் காட்டுவதில்லை என்றும் பரிசோதனை நடத்தப்படுவது அவரவர் விருப்பம் சார்ந்ததாக இருப்பதால் அங்கு மேலும் பலருக்கு கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் மூலம் 5 பேருக்கு தொற்று ... டியூசன் சென்ற மாணவியால் மேலும் பரவல் | #coronavirus https://t.co/Vr5ZTr44qr
— Polimer News (@polimernews) July 12, 2020
Comments