ஒலிம்பிக் கனவுடன் கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்யும் குத்துச்சண்டை வீராங்கனை!

0 3453

ப்பான் நாட்டின் குத்துச்சண்டை வீராங்கனை அரைசா சுபடா. மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் 27 வயதாகும் அரைசாவுக்கு ஜப்பான் நாட்டுக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவரது ஆசை. அவரது கனவுக்கு பெரும் தடையாக மாறியிருக்கிறது கொரோனா.

அரைசா சுபாடா அடிப்படையில் ஒரு செவிலியர். கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதுதான் அவரது வேலை. இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல் எடையைக் குறைக்கும் நோக்கில் பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டார். எப்படித் தற்காத்துக்கொள்ள வேண்டும், எதிரியை எப்படி வளையத்துக்குள் வீழ்த்த வேண்டும் என்பதை மற்றவர்களை விடவும் விரைவில் கற்றுக்கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர் ஜப்பான் தேசிய சாம்பியன்ஷிப்பையும் வென்றார். தேசிய குத்துச்சண்டை அணியிலும் இடம் பிடித்தார். அவரது திறமை காரணமாக பாக்சிங் தர நிலையில் முன்னேறி, ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் நிலைக்கு உயர்ந்து உள்ளார்.

image

இந்த நிலையில் தான் ஜப்பானில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று அவரது கனவைக் கேள்விக்குறியாக மாற்றி உள்ளது.  செவிலியரான அரைசா கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது டோக்கியோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறார்.
முழு நேரப் பயிற்சியில் ஈடுபட வேண்டிய அரைசா தற்போது பெரும்பாலான நேரத்தை மருத்துவ மனையில் கழித்து, எஞ்சிய நேரத்தில் மட்டுமே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து, "மற்றவர்களை விடவும் எங்களுக்கு எளிதில் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. நோய் தொற்றிவிடலாம் எனும் உச்சகட்ட மன அழுத்தத்தில் தான் பணிபுரிந்து வருகிறோம். நோய் பரவல் அதிகமாகி வருவதால் நீண்ட நேரம் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டி உள்ளது. இது எனது பயிற்சி நேரத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது.

கொரோனா நோய் பரவல் காரணத்துக்காக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். பயிற்சி செய்வதற்குக் கூடுதல் அவகாசம் கிடைத்திருக்கிறது. குத்துச்சண்டையில் குறைவான அனுபவம் தான் எனக்கு இருக்கிறது. குத்துச்சண்டை கூட்டமைப்பிடம் எனது திறமையை நிரூபித்தாக வேண்டிய நெருக்கடியில்  இருக்கிறேன். என்னால் இறுதிவரை போராட முடியும் என்று நம்புகிறேன் " என்றார்.

அரைசாவின் 58 வயது தந்தை, "கொரோனா நோய்த் தொற்று பரவத்தொடங்கிய பிறகு அரைசாவை வீட்டில் பார்க்கவே முடிவதில்லை. மருத்துவமனையில் தான் மக்களுக்கு உதவிசெய்துகொண்டு இருக்கிறார். ஒலிம்பிக் குத்துச்சண்டைக்குப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்" என்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments