2020ல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு சாத்தியமில்லை
கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் நாடாளுமன்ற நிலைக் குழு மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வல்லுநர்கள், அமெரிக்காவை சேர்ந்த Gilead Sciences மற்றும் Moderna மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளன.
ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியில் உள்ள தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக நல்ல பலன் கொடுக்கும் என்பது, நடப்பு கோடை காலம் முடிவதற்குள் உறுதிப்படுத்தப்படும் என அப்பல்கலைக்கழக பேராசிரியர் சுனத்ரா தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்த பயான்டெக் நிறுவனம், பரிசோதனைகளை முடித்து தடுப்பூசிக்கு நடப்பு ஆண்டு இறுதியில் அங்கீகாரம் கோரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆராய்ச்சியில் உள்ள அந்நிறுவனத்தின் தடுப்பூசியானது, மனிதர்கள் மீதான தொடக்க கட்ட பரிசோதனையில் நல்ல விளைவைத் தந்துள்ளது. சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் விரிவான பரிசோதனையை, அதற்கான அனுமதி கிடைத்தவுடன் பயான்டெக் நிறுவனம் இம்மாதத்தில் தொடங்க உள்ளது.
இதேபோல, அமெரிக்காவில் முதன் முதலில் மனிதர்கள் மீது தடுப்பூசி பரிசோதனையை மேற்கொண்ட மாடெர்னா நிறுவனம், இம்மாதத்தில் இறுதிக்கட்ட பரிசோதனையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி, உடலில் நோய் எதிர்ப்பு புரதங்களை உருவாக்கும் என்பது, ஆரோக்கியமான மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சிறிய அளவிலான பரிசோதனையில் கண்டறியப்பட்டது. தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்த பிறகு, பெரிய அளவில் தயாரித்து, வெளிச்சந்தைகளில் விற்பதற்காக ஸ்பெயின் நாட்டின் Laboratorios Farmacéuticos Rovi SA நிறுவனத்துடன் மாடெர்னா ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனிடையே, கொரோனாவுக்கான தடுப்பூசியை அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் எதிர்பார்க்க முடியும் என, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
முன்னதாக, மத்திய அரசின் அறிவியல் ஆலோசகரும், அறிவியல்-தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பவியல் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் ஆகியவையும் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சிகள் குறித்து விரிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளனர். அதில் கொரோனா தடுப்பூசி நடப்பு ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments