சாத்தான்குளம் இரட்டைக்கொலை வேகமெடுக்கிறது சிபிஐ விசாரணை
சாத்தான்குளம் தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக, அவர்களது வீட்டில் விசாரணையை துவங்கிய சிபிஐ அதிகாரிகள், தொடர்ந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, காவல் நிலையம், பென்னிக்சின் கடை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை - மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இது தொடர்பான வழக்கை கையிலெடுத்த சிபிஐ அதிகாரிகள், இதற்கு முன்பு வழக்கை விசாரித்த சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஆவணங்களை பெற்று விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் இன்று காலையில் சிபிஐ அதிகாரிகள் தங்கியிருக்கும் வண்ணாரபேட்டை அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த சிபிசிஐடி போலீசார், சீலிடப்பட்ட உறையில் வைத்து மேலும் சில ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பிற்பகலில் அங்கு வந்த சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமார், சிபிஐ அதிகாரிகளை சந்தித்து மேலும் சில ஆவணங்களை வழங்கினார்.
இதனிடையே சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ், பென்னிக்சின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கிய சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள், ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள்கள், ஜெயராஜின் தங்கை, தங்கையின் கணவர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து காவல்நிலைய விசாரணைக்கு பிறகு ஜெயராஜும், பென்னிக்சும் சிறையிலடைக்க உடற்தகுதியுடன் இருப்பதாக மருத்துவச் சான்று பெறப்பட்ட சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அங்கு ஜெயராஜ் தங்கையின் கணவர் ஜோசப், இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது நடந்தவற்றை சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினார். அதனையும், மருத்துவமனையையும் சிபிஐ அதிகாரிகள் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், ஜெயராஜ் - பென்னிக்ஸ் வீட்டில், 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு, சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.
ஜெயராஜ் - பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐயின் 8 அதிகாரிகள் குழு, விசாரணை பகல் 11.30 மணிக்கு துவங்கியது. இடையில், 4 சிபிஐ அதிகாரிகள் மட்டும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் சிறையில் அடைப்பதற்கு முன், மருத்துவ சிகிச்சையும், உடல் தகுதி சான்றிதழும் வழங்கிய சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதன்பிறகு, திரும்பி வந்த 4 பேர் குழு, மீண்டும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வீட்டில் நடந்து வந்த விசாரணையில் இணைந்து கொண்டனர்.
மாலை வரை, சுமார் 7 மணி நேரம், ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்று சுமார் 10 நிமிடங்கள் ஆய்வு செய்தனர். இதன்பின்னர், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசினர் விடுதிக்கு, சிபிஐ அதிகாரிகள் 8 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர்.
Comments