இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கு பதில், மாற்று மதிப்பீட்டு முறை

0 72270
தமிழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்துவது சாத்தியமில்லை என முதலமைச்சர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்துவது சாத்தியமில்லை என முதலமைச்சர் கூறியுள்ளார். எனவே, தேர்வுக்கு பதிலாக மாநில அரசுகள் உருவாக்கும் மதிப்பீட்டு முறைகளை அங்கீகரிக்க வேண்டும் என  மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பேரிடர் காரணமாக, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் செமஸ்டர் எனப்படும் பருவத் தேர்வுகளை கடந்த ஏப்ரலில் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகள் நடத்துவதற்காக, கடந்த 6ஆம் தேதி யுஜிசி புதிய வழிகாட்டுதல்கலை வெளியிட்டதையும், அதன்படி, உயர்கல்வி நிறுவனங்கள், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துமாறு கூறியுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த புதிய வழிகாட்டுதல்களில், பல்வேறு சிரமங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெவ்வேறு மாவட்டங்களிலும், வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் உள்ள நிலையில், சிலர் வேறு நாடுகளிலும் கூட உள்ள நிலையில், தேர்வு மையங்களை சென்றடைவது உள்ளிட்ட சிரமங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்களை டிஜிட்டல் முறையில் அணுகுவதில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை கருதும்போது, ஆன்லைன் தேர்வுகளை நடத்துவதும் நடைமுறைச் சாத்தியமில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் வகுப்பறைகள், விடுதி அறைகள் உட்பட அனைத்தும், அறிகுறி இல்லாத நோயாளிகளுக்கான கொரோனா சிகிச்சை மற்றும் தனிமை மையங்களாக உள்ள நிலை மேலும் சில காலத்திற்கு தொடரக்கூடும் என்பதையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் வரை காத்திருந்த பின்னரும் தேர்வு நடத்த முடியாத சூழல் இருந்தால், இறுதி ஆண்டு, இறுதி செமஸ்டரில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தில்
பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

வெளிநாடுகளில் கல்வி பயில விண்ணப்பித்தவர்கள், கேம்பஸில் வேலைவாய்ப்புக்கு தேர்வானவர்கள் போன்றவர்வர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.

பல மாநிலங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில்லை என முடிவெடுத்துள்ளன என்றும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளையும், அதேசமயம் சுகாதாரம், பாதுகாப்பு, சமவாய்ப்புகளையும் உறுதிப்படுத்த மாநில அரசுகளே,கல்வியின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாமல், சொந்த மதிப்பீட்டு முறைகளை உருவாக்க அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments