"ஆடு களவு போகவில்லை" பாலியல் புகார் மாணவி பல்டி..! படிப்புக்கு வழிகாட்டினாராம்..!

0 49235

கொரோனா தன்னார்வலரான கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மாநகராட்சி அதிகாரிக்கு எதிராக தான் போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட மாணவி வழக்கறிஞர்கள் உடன் சென்று மறுப்பு மனு அளித்துள்ளார். ஆனால் வழக்கரிஞர்களின் நிர்பந்தத்தை ஏற்க காவல்துறையினர் மறுத்து விட்டனர்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் உதவி செயற்பொறியாளராக இருந்தவர் கமலகண்ணன். இங்கு கொரோனா குறித்து வீடு வீடாக பரிசோதிக்க தன்னார்வலராக பணியில் இருக்கும் கல்லூரி மாணவி ஒருவரிடம், கமலக்கண்ணன் ஆசையை தூண்டும் விதமாக ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக எஸ்.பிளனேடு காவல் நிலையத்தில் கைப்பட எழுதி புகார் அளித்தார். கமலக்கண்ணன் பேசிய ஆடியோவும் வெளியானது

இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , உதவி செயற்பொறியாளர் கமலகண்ணனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து கமலகண்ணன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிடார். அவரை தேடி வருவதாக அறிவித்த காவல்துறையினர், அவரது புகைபடத்தையும் வெளியிட்டனர்

இந்த நிலையில் ஆயிரம் விளக்கில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு காவல் கண்காணிப்பாளரை, வழக்கறிஞர்கள் சிலருடன் சென்று சம்பந்தப்பட்ட மாணவி சந்தித்து தான் அளித்த பாலியல் புகாரை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார்.

அப்போது உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தனது அண்ணன் போன்றவர் என்றும் அவர் தன்னிடம் தவறாக ஏதும் பேசவில்லை என்றும், அவர் தன்னுடைய எதிர்கால திருமண வாழ்க்கை குறித்தும், படிப்புக்கான ஆலோசனைகளை மட்டுமே வழங்கினார் என்றும் தனது செல்போனில் இருந்து குரல்பதிவை திருடி யாரோ வெளியிட்டு விட்டனர் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது

மேலும் கமலக்கண்ணன், மீது எழுத்து மூலமாகவோ, வாய்மொழியாகவோ தான் எந்த புகாரும் கொடுக்க வில்லை என்றும் எஸ்பிளேடு மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தான், தானாக முன்வந்து செல்போன் மூலம் தன்னிடம் இந்த சம்பவம் குறித்து விசாரித்ததாகவும், அதில் அந்த அண்ணன் ரொம்ப நல்லவர் என்று கூறியதாகவும் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்று டைப் செய்யப்பட்ட மனு ஒன்றை அந்த மாணவியின் கையெழுத்து மட்டும் போட்டு வழக்கறிஞர்கள் கொடுத்துள்ளனர்.

அதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக முதலில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்டவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அங்கு பார்த்துக் கொள்ளும்படி எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

இந்த மாணவி கூறியுள்ள படி செல்போனில் இருந்து ஆடியோவை திருடி வெளியிட்டு விட்டனர் என்றால் அந்த ஆடியோவில் பேசியது கமலக்கண்ணன் தான் என்பது பரப்பியவர்களுக்கு எப்படி தெரியும் ? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் எதிர்காலத்தை சுட்டிக்காட்டி சிலரால் மிரட்டப்பட்டதால் அந்த ஏழை மாணவி ஆடியோ குறித்து தெரிவித்த புகாரை மறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments