"கோல்டு காயின் கொளுக்கட்டை" மருமகருக்கு உணவு விருந்து..! 67 வகை சமையல் அசத்தல் மாமியார்
ஆந்திராவைச் சேர்ந்த மாமியார் ஒருவர் தனது வீட்டிற்கு விருந்துக்கு வரும் மருமகனுக்கு, தங்க நாணய கொழுக்கட்டை உள்ளிட்ட 67 வகையான உணவுப் பதார்த்தங்களை வைத்து வரவேற்று அசத்தியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் திரைப்படம் ஒன்றில் விருந்துக்கு வரும் மாப்பிள்ளை சாப்பிடுவதை கண்டு மிரண்டுபோய் ஒரு குடும்பமே அல்லோலப்படும் நகைச்சுவை காட்சி மிகவும் பிரபலம்.
ஆனால் நிஜத்தில் ஆந்திர மாநிலத்தில் தங்கள் வீட்டுக்கு வந்த மருமகனுக்காக பாரம்பரிய முறைப்படி தலைவாழை இலை போட்டு, விதவிதமான உணவுப் பதார்த்தங்களை பரிமாறி விருந்து வைத்து அசத்தியுள்ளார் பாசக்கார மாமியார் ஒருவர்.
விருந்துக்கு வந்த மருமகனை வரவேற்பதற்காக, ஜெர்ரி கேக்கில் தொடங்கி புதினா ஜூஸ், வெள்ளரிக்காய் ரோல், பப்பாளிப்பழம், கோபி 65, பேபி கார்ன் 65, பேபிகார்ன் பெப்பர், பஜ்ஜி, அப்பளம், நேந்திரம் சிப்ஸ், பூரி, சப்பாத்தி, டிரைஃபுட்ஸ், பானிப்பூரி, 3 விதமான கொழுக்கட்டைகள்.. அதில் ஒரு கொழுக்கட்டையில் மருமகனுக்குப் பரிசாக 5 கிராம் தங்க நாணயம் வரை வைத்து அசத்தி இருக்கிறார் அந்த மாமியார்.
பாயாச வகைகள், சாத வகைகள், இனிப்பு வகைகள், நொறுக்குத் தீனிகள் என காலி இடமில்லாமல் இலை முழுவதும் நிரம்பியிருந்தது.
பால் ஸ்வீட், சைனா ஸ்வீட், லட்டு, 7 வகையான சாட் வகைகள், உப்பு, ஊறுகாய், பீடா, ஜீரணத்துக்காக தேனில் ஊறவைத்த முக்கனிகள் என வாழை இலையை மட்டுமல்ல உணவருந்தும் மேஜையையே நிறைத்து விட்டன 67 வகையான உணவு பதார்த்தங்கள்.
இலையைச் சுற்றி மல்லிகைப்பூ மாலையை அழகாக வைத்து மருமகனை சிறப்பாக கவனித்துள்ளார் பாசக்கார மாமியார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் பலராலும் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் வசதிபடைத்தோர் வீடுகளில் மருமகன் விருந்துக்கு வருகிறார் என்றால் இதுபோன்ற தடபுடலான விருந்து ஏற்பாடுகள் நடத்தப்படுவது, தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இந்த விருந்து பட்டியலே சான்று.
Comments