இந்தியாவுக்கு எதிரான நேபாள பிரதமரின் போக்கு... பிளவுபடும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி!
நேபாள அரசியலில் புதிய திருப்பமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபடும் சூழலை நோக்கிச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேபாள பிரதமரான கேபி ஒலி சர்மாவின் இந்தியா விரோத நடவடிக்கைக்கு எதிராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அனைவரும் முன்னாள் பிரதமர் பிரசந்தா புஷ்ப கமல் தலைமையில் ஒன்றுகூடி உள்ளனர். இவர்கள் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ஒலிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
நேபாள பிரதமராக சர்மா ஒலி பதவி ஏற்றதிலிருந்தே நேபாளத்தில் பொருளாதார சரிவும் வேலையின்மையும் அதிகமாகியது. இவர் மீது அதிருப்தி அதிகமாகப் பதவி விலக வேண்டும் என்று குரல் ஓங்கி எழுந்தது. தன் மீது எழுந்த குற்றச்சாட்டை மடைமாற்ற இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கினார், சர்மா ஒலி. சீனாவின் தூண்டுதலின் பேரில் தன்னிச்சையாக இந்தியப் பகுதிகளை நேபாள நாட்டுடன் ஒன்று சேர்த்து புதிய வரைபடத்தை வெளியிட்டு அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றம் செய்தார்.
இதற்கு, இந்தியா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. நேபாள இந்திய சாலைகள் மூடப்பட்டன. இந்தியாவிலிருந்து சரக்கு செல்வது நின்றது. இதனால், நேபாளத்தில் விலைவாசி உயர்ந்தது. இதனால் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சர்மா ஒலிக்கு எதிர்ப்பு மேலும் அதிகமானது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் ஒலிக்கு எதிராகத் திரும்பினார்.
தற்போதைய பிரதமரான ஒலிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அனைவரும் முன்னாள் பிரதமர் பிரசந்தா புஷ்ப கமல் தலைமையில் ஒன்று சேர்ந்து உள்ளனர். ஒலிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான மாதவ் குமார் மற்றும் ஜலநாத் கனல் ஆகியோரும் குரல் எழுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் புஷ்ப கமலுக்கும் சர்மா ஒலிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளனர் எதிர் கோஷ்டியினர். ஆனால், கட்சியை இரண்டாக உடைத்து, நேபாள காங்கிரஸ் கட்சியின் துணையுடனாவது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார் சர்மா ஒலி. அவருக்குச் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருகிறது.
இதனிடையே நேபாளத்திற்கான சீன தூதர் ஹோ யாங்கி (Hou Yanqui) பிரதமர் சர்மா ஒலிக்கு ஆதரவாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து பஞ்சாயத்து செய்ய முயற்சி செய்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேபாள பிரதமருக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்புக் குரல் நேபாள அரசியலைப் பரபரப்பாக மாற்றியிருக்கிறது.
Comments