’ஐஎஸ் அமைப்புக்கும் ஸ்வப்னா சுரேஷுக்கும் தொடர்பு?’ - தங்கக் கடத்தல் வழக்கில் பரபரப்பு திருப்பம்

0 17999

கேரளாவிற்கு தங்கம் கடத்தி வரும் கும்பலுக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பிருக்கலாம் என உளவுத்தகவல் கிடைத்திருப்பதாக கேரள உயர்நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. இது கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, கேரள அரசியலில் புது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகம் துணைத் தூதரகம் மூலம் முப்பது கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக கடத்த முயன்ற வழக்கில் சரித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய கேரள தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஸ்வப்னா சுரேஷ் மாயமானார். இந்த வழக்கில் முதல்வரின் தனிச் செயலாளரான சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டது. 

தற்போது தலைமறைவாகியிருக்கும் ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, உபா (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு Unlawful Activities (Prevention) Act) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், முன்ஜாமீன் அளிக்கக் கூடாதென தேசிய புலனாய்வு அமைப்புத் தரப்பில் நீதி மன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் கேரள தங்கம் கடத்தல் கும்பலுடன் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதற்கான உளவுத்தகவல் கிடைத்திருப்பதாகவும்; தீவிரவாத கும்பலுக்கு நிதி உதவி செய்யவே தங்கக் கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என்று உயர்நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல் தெரிவித்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபரின் முன்ஜாமீன் மனுவை ஏற்க முடியுமா என ஆராயப்படும் என்ற நீதிபதிகள் கூறினர்.

தங்கக் கடத்தல் வழக்கில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பிருக்கலாம் என்று தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் கூறியிருப்பது தங்கக் கடத்தல் வழக்கில் புது திருப்பத்தையும் கேரள அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments