'சத்யராஜின் மகளாக மட்டுமல்லாமல் தமிழ்ப் பெண்ணாக மக்கள் நலன் காக்க உழைப்பேன்' - அரசியலில் ஈடுபடப் போவதாக திவ்யா அறிவிப்பு

0 40772

பிரபல ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா, நடிகர் சத்யராஜின் மகள்.  மதிய உணவு வழங்கும் அறக்கட்டளையான அட்சய பாத்திரத்தின் விளம்பரத் தூதுவராகவும் இவர் செயல்பட்டு வருகிறார். ஊட்டச்சத்து நிபுணர் என்ற வகையில்,  திவ்யாவின்  சேவைகளைப் பாராட்டி அமெரிக்காவின் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று காலத்தில் சத்தான உணவுகளை உண்டு ஊட்டச் சத்துக் குறைபாடு இல்லாமல் மக்கள் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார் திவ்யா. ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களின் உடல் நலன் சார்ந்த விஷயங்களில் திவ்யா அக்கறை காட்டி வருகிறார். இந்த சமயத்தில் அவரின் பணிகள் குறித்து பேசினோம்...

ஊட்டச்சத்து  துறையில்  இதுவரை என்னென்ன பணிகளைச் செய்திருக்கிறீர்கள், ஊட்டச்சத்து நிபுணராக உங்களது பயணம் எப்படிச் செல்கிறது?

ஊட்டச்சத்து நிபுணராகப் பயிற்சியைத் தொடங்கிய போதே நான் எப்போதும் எனக்குள் சொல்லிக்கொள்வேன். ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வசதியானவர்களுக்கு மட்டும்தான் என்று இருக்கும் நிலை நியாயம் இல்லாதது. ஆரோக்கியமான வாழ்க்கை என்பது அனைவரின் உரிமையும் கூட. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். அதனாலேயே நான், வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவர்களிடத்திலும், அரசு பள்ளியில்  கல்வி பயிலும் ஏழைக் குழந்தைகளிடம் இருந்தே என் ஆராய்ச்சியைத் தொடங்கினேன்.

image

களப்பணிகளைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஐந்தில் இரண்டு பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட 40 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக போதுமான வளர்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள். இது தொடர்பாக அரசுத் தரப்பிலும் பேசியிருக்கிறேன். உரிய நடவடிக்கைகள் எடுக்க அரசு ஏற்பாடு செய்த நேரத்தில்,  கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிவிட்டது. நம் ஊரில் பெரும்பாலான ஏழைக் குழந்தைகள் மதிய உணவுத் திட்டம் மூலம் தான் சத்தான உணவுகளை உண்டு வந்தனர். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் இப்போது மூடியிருக்கின்றன. இந்த சூழலில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய ஊட்டச்சத்து கிடைத்தால் தான் குழந்தைகளால் நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட முடியும். மருத்துவக் கட்டமைப்பில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு பரவாயில்லை. ஆனால், இந்த சுகாதாரக் கட்டமைப்பு அனைத்து மக்களுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறைபாடு உள்ளவர்களுக்கு உதவவும்  இப்போது வைட்டமின் ஒர்க்ஷாப்  நடத்தி வருகிறேன்.

சுகாதாரத் துறையில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

கொரோனா பரவல் தொடங்கிய பிறகு அனைவருமே நோய் எதிர்ப்பு சக்தி குறித்தும் உணவு முறை குறித்தும் பேசத்தொடங்கிவிட்டனர். ஒருவிதத்தில் இந்த விழிப்புணர்வு நல்லதுதான். ஆனால், யார் எதைப் பேசவேண்டும் எனும் வரைமுறை இருக்கிறது. மருத்துவமே படிக்காத டிக்டாக் பிரபலம் ஒருவர் பிரசவம், நோய் எதிர்ப்பு சக்தி பற்றி அறிவுரை வழங்குகிறார். வீடியோ ஜாக்கி ஒருவர் இதய நோய் குறித்தும் டயட் பற்றியும் பேசுகிறார். இந்த முறையற்ற பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். மருந்துகள், ஊட்டச்சத்து மாத்திரைகள், டயட் முறை அனைத்தும் அந்தத்த துறை நிபுணர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களில் பேசுபவர்களைப் பின்பற்றினால் பிரச்னைதான். தகுதியானவர்கள் மட்டுமே மக்களுக்கு மருத்துவம் பற்றி அறிவுரை வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பேசினால் குழப்பம் மட்டும்தான் மிஞ்சும்.காலாவதியான மருந்துகளை அப்புறப்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொரோனா சமயத்தில் பொதுமக்களும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஊட்டச்சத்து துறையில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

நான் குழந்தையாக இருந்தபோது சரியாகச் சாப்பிட மாட்டேன். பொதுவாக, குழந்தைகளைச் சாப்பிட வைக்க பேய், பூச்சாண்டி என்று பயமுறுத்துவார்கள். ஆனால், அப்பா அப்படி ஒருமுறை கூட என்னைப் பயமுறுத்தியதில்லை. அவருக்கு அதில் நம்பிக்கையும் இருந்தது இல்லை. என்னைச் சாப்பிட வைக்க ஒவ்வொரு உணவுப் பொருள்கள் குறித்தும் விளக்குவார். இந்தப் பழம் சாப்பிட்டால் தான் கண் நன்றாக தெரியும். இதைக் காயை சாப்பிட்டால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று சாப்பிடும் உணவுப் பொருள்களின் நன்மையை விளக்கிச் சாப்பிட வைப்பார். அதனால் சிறு வயதிலேயே ஊட்டச்சத்து குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாகிவிட்டது. அதன் நீட்சிதான் என்னை ஊட்டச்சத்து நிபுணராக்கியிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று பரவும் காலத்தில் மக்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருள்கள்?

ஒவ்வொருவர் உடலிலும் தேவையான அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஏற்கெனவே, நோய் தொற்று தாக்கியிருந்தால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வைட்டமின் தெரபி மூலம் அதிகப்படுத்த முடியும். இந்த சூழலில் அனைவரும் கண்டிப்பாக மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நான் ’சிங்கோவிட்' மாத்திரையை  (ZINCOVIT) அனைவருக்கும் பரிந்துரைத்து வருகிறேன். மருத்துவர் ஆலோசனைப்படி மற்ற மல்டி விட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தினமும் உணவுப் பொருள்களில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, முட்டை, காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிட்டாலே போதும். நோய் எதிர்ப்பு சக்தி தானாகக் கிடைத்துவிடும். இயன்றவரை வெளி சாப்பாடுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

குடும்பத்தில் அப்பா, அண்ணன் என்று அனைவரும் நடிப்புத்துறையில் இருக்க தாங்கள்  மட்டும் மருத்துவத் துறைக்கு வந்ததன் காரணம் என்ன?

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது , எனக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால், அதைப் பற்றிச் சிந்திக்க முடியாத அளவுக்குக் கல்லூரி தேர்வுகள், அசைன்மென்ட், பயிற்சி என்று பிசியாக இருந்துவிட்டேன். பிறகு, ஊட்டச்சத்து நிபுணராக எனது பணியைத் தொடர்ந்துவிட்டேன். சினிமா மீது நாட்டம் செல்லவில்லை. அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்ட அடிப்படை அரசியல் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்குச் சேவை செய்யத் தொடங்கிவிட்டேன்.

உங்களது எதிர்காலத் திட்டம் பற்றிச் சொல்லுங்கள்?

தற்போது, மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கப் போகிறேன். விரைவில் அதுகுறித்த முறையான அறிவிப்பு வெளிவரும். இது அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஜாதி - மதம் என்று எதையும் சார்ந்திருக்காமல் செயல்படும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடில்லாமல் கிடைக்கவேண்டும் எனும் நோக்கில் மக்கள்  சார்ந்த இயக்கமாக அது இருக்கும். இது எனது கனவும் கூட. இந்த இயக்கம் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஆய்வு செய்து, அந்தக் குறைபாட்டை நிறைவு செய்யும் வகையில் இயங்கும். தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கலாம் என்று இருக்கிறேன். கொரோனா சமயத்தில் தொடங்குவது மனநிறைவைத் தருகிறது.

இந்த இயக்கத்தின் மூலம் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறீர்கள் என்று கருதலாமா?

சிறிய வயதிலிருந்தே எனக்கு அரசியல் மிகவும் பிடிக்கும். வீட்டில் நான், அப்பா , அண்ணன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்தால் சினிமா, உணவு, அரசியல் பற்றிதான் அதிகம் பேசுவோம். அப்பா கம்யூனிசம், பெரியார் அதிகம் பேசுவார். அதே போன்று நானும் கம்யூனிச கருத்துக்களால் அதிகம் கவரப்பட்டேன். அப்பாவின் அரசியல் பாடமும் நிறையவே கிடைத்திருக்கிறது. எனக்கு நல்லக்கண்ணு ஐயாவை மிகவும் பிடிக்கும். தன்னலமில்லாத அரசியல் தலைவர் அவர். அதனால், கம்யூனிச கட்சியில் சேர்வேன் என்று சொல்ல முடியாது. எனது அரசியல் பாதை புதியதாக இருக்கும். விரைவில் அரசியல் குறித்து முறையாக அறிவிப்பேன்.

சத்யராஜின் மகள் என்பதால் உங்களது அரசியல் முடிவுக்கு அதிக கவனம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?

நான் அப்படி நினைக்கவே இல்லை. நான் சுயமாக சம்பாதிக்கிறேன். எப்போதும் சுதந்திரமாகவே இருக்கிறேன். அப்பாவை நிச்சயம் சார்ந்திருக்க மாட்டேன். என்னுடைய உயிர்த் தோழன் என்றால் அப்பா தான். அதனால், அவரது துணை இருக்கலாம். ஆனால், அவரை முழுவதும் சார்ந்திருக்க மாட்டேன். எனது நோக்கம் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். பொதுவாக என்மீது வேறொரு பார்வை இருக்கிறது. வசதியான வீட்டிலிருந்து வந்தவள் என்பதால் உழைக்கத் தெரியாது என்கிற பார்வை என் மீது இருக்கலாம். உண்மையில் பென்ஸ் காருக்கும் டைமண்ட் நகைக்கும் அடிமையாக வளர்க்கப்பட்ட பெண் நான் இல்லை. சத்யராஜின் மகளாக மட்டும் இல்லாமல் ஒரு தமிழ் மகளாகத் தமிழர் நலன் காக்க உழைப்பேன். அப்பாவின் உழைப்பையோ, பணத்தையோ ஒரு நாளும் சொந்த வளர்ச்சிக்காகப் பயன்படுத்தியதில்லை. எதிர்காலத்திலும் அப்படி இருக்க மாட்டேன். நிச்சயம் அரசியல் பயணத்தில் வெற்றிபெறுவேன்.''

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments