ஆசியாவின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்கா.. பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்..!
ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் ஆயிரத்து 590 ஏக்கர் பரப்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய ஒளி மின்சார உற்பத்தி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 750 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அந்த அமைப்பை, டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சியின் மூலம் நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சூரிய ஒளிமின்சாரமானது, தற்கால மின்சாரத் தேவைக்கு மட்டுமானது அல்ல என்றும், 21ம் நூற்றாண்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யவும் அது அவசியம் என்று தெரிவித்தார்.
சூரிய ஒளி மின்சார நிலையானது, சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். ரேவாவில் அர்ப்பணிப்பு செய்யப்பட்ட சூரிய மின்சார உற்பத்தி அமைப்பின் மூலம் மத்திய பிரதேசத்தின் தொழிற்சாலைகளுக்கு மட்டும் மின்சாரம் அளிக்கப்படுவதோடு இல்லாமல், டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் மின்சாரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ரேவாவை போன்று மத்திய பிரதேசத்தின் சாஜாபூர், நீமுச், சத்தார்பூர் ஆகிய இடங்களிலும் சூரிய ஒளி மின்உற்பத்தி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Comments