கார்பன் டாக்டரும் எஸ்கேப் சுவப்ணாவின் ரூ.90 கோடி தங்க கடத்தலும்..! ஆடியோ வெளியிட்டு கதறல்

0 16568

கொரோனா காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த விமானத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்டதாக தேடப்பட்டுவரும் ஸ்வப்ணா, கேரள முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களுடனான தொடர்பு குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுவர்ண கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னாவின் தில்லு முல்லு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்க கட்டிகள் சுங்க இலக்காவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கதவுகளை தானாக மூட பயன்படுத்தும் கருவிக்குள் முக்கிய பாகங்களை எடுத்து விட்டு உள்ளே தங்க கட்டிகளை உருளை வடிவத்தில் உருக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தங்க கடத்தல் தொடர்பாக தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ள சரித்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கும் இந்த தங்க கடத்தலில் பங்கு இருப்பதாக கூறப்பட்டதையடுத்து ஸ்வப்னா பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ஸ்வப்னாவை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி இந்த கடத்தலை கடந்த மார்ச் மாதம் முதல் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுவரை 11 தடவை விமானத்தில் 100 கிலோவுக்கும் மேல் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் அதில் தற்போது தான் சிக்கி உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தி வரப்படும் தங்ககட்டிகளை பிரித்து எடுப்பதற்கு என்றே கார்பன் டாக்டர் என்ற பெயரில் சொகுசு கார்களுக்கான ஒர்க் ஷாப் ஒன்றை ஸ்வப்னா, தனது ஆண் நண்பருடன் இணைந்து நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

தூதரகத்திற்கு வரும் தங்ககட்டி பார்சலை, எந்த வித சோதனை கெடுபிடியும் இன்றி தூதரக காரில், கார்பன் டாக்டர் ஒர்க் ஷாப்பிற்கு கொண்டு சென்று பார்சலில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்க கட்டிகளை மட்டும் தனியாக பிரித்து எடுத்து வேறொரு காரில் வெளியே எடுத்து சென்று விடுவர் என்று கூறப்படுகின்றது. தலைமறைவாக உள்ள அவர் முன்ஜாமின் கோரி ஆன்லைன்மூலம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே, ஸ்வப்னா கேரள முதல் அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் இருப்பது போன்ற புகைபடங்களும், ஸ்வப்னாவின் மகள் எஸ்.எப்.ஐயில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானதை தொடர்ந்து ஸ்வப்னா ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்

அதில் தான் தூதரகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் முதல் அமைச்சர் மட்டுமல்ல அனைத்து அமைச்சர்கள், தூதர உயர் அதிகாரிகள், பிரபலங்கள் என அனைவரது அருகிலும் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதே போல அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவர்களை அழைக்கும் பொறுப்பும் தன்னை சார்ந்தது என்பதால் அனைவருக்கும் தன்னை தெரியும் என்றும் இந்த தங்க கடத்தலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் ஸ்வப்னா மறுத்துள்ளார்.

அதே போல சில அமைச்சர்களுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள இரவு விடுதிகளில் தான் விருந்து கொடுத்ததாக வெளியான தகவலையும் மறுத்துள்ள ஸ்வப்னா, தனது மகள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐயில் உறுப்பினராக இருப்பதை நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டுள்ளார்...

ஸ்வப்னாவின் தங்ககடத்தல் விவகாரம் கேரள அரசுக்கு தலைவலியாக மாறியுள்ள நிலையில் அதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஸ்வப்னாவை ஆடியோ வெளியிட வைத்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. இந்த நிலையில் இந்த தங்க கடத்தல் வழக்கு தேசியபுலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நாடே கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில் கேரளாவில் ஆளும் கட்சியோ ஸ்வப்னாவின் ஸ்வர்ண கடத்தல் விவகார குற்றச்சாட்டில் சிக்கி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments