சாதனை திருமகள் மாணவி ஸ்ரீதேவி..! காடு மேடுகளை கடந்த சாதனை..

0 7541

மிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கேரள அரசுப் பள்ளியில் படித்த தமிழக பழங்குடியின மாணவி ஒருவர் பேருந்து வசதியில்லாததால், காடுமேடுகளை கடந்து சென்று தேர்வு எழுதி 95 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்...

நடக்க நல்ல சாலை இல்லை..! வசிக்க நல்ல வீடு இல்லை..! தொட்டவுடன் பளிச்சிட மின்விளக்கும் இல்லை..! இருட்டைப் பகலாக்க அங்கு மின்சாரமும் இல்லை..! மலையும் காடும் சேர்ந்த வனப்பகுதி அது..!

இப்படிப்பட்ட சூழலில், தனது விடாமுயற்சியினால் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாதித்துக்காட்டி இருக்கிறார் பழங்குடியின மாணவி ஸ்ரீதேவி..!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பூச்ச கொட்டாம்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரது மகளான ஸ்ரீதேவி, குடும்பம் தமிழ்நாட்டில் வசித்து வந்தாலும், கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி படித்து வந்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வின்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் ஸ்ரீதேவி வீட்டிற்குத் திரும்பிய நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மே 26-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக திடீர் அறிவிப்பு வெளியானது.

மாணவி ஸ்ரீதேவியின் வீட்டில் மின்சார வசதியோ செல்போன் வசதியோ இல்லாததால், 25ஆம் தேதி மாலையில் தான் மறுநாள் தேர்வு என்பது ஸ்ரீதேவிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து தனது தந்தையுடன் சில கிலோமீட்டர் தூரம் நடந்தே புறப்பட்டு, வழுக்குப்பாறை சோதனைச்சாவடியில் இருந்து கரடுமுரடான பாதையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஸ்ரீதேவி பல சோதனைகளைத் தாண்டி பயணித்தார்.

மாணவி ஸ்ரீதேவி கஷ்டப்பட்டு தேர்வு எழுதவரும் தகவலை ஆசிரியர்கள் அங்குள்ள அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து ஸ்ரீதேவியை விரைவாக அழைத்துச் செல்ல ஏதுவாக கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸ் தயாராக இருந்தது.

அதில் பயணித்து பள்ளிக்குச் சென்ற ஸ்ரீதேவி பதற்றமின்றித் தேர்வு எழுத வசதியாக தனி அறை ஒதுக்கப்பட்டது. இப்படி பல தடைகளை தாண்டி தேர்வு எழுதிய ஸ்ரீதேவி தற்போது வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இதையடுயடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் கேரளா மாநில பள்ளிக் கல்வி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவி ஸ்ரீதேவியைப் பாராட்டி பரிசு அளித்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் இருக்கும் பழங்குடி பெண்கள் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பது கிடையாது. தனது பெண்ணுக்கு இந்த நிலை ஏற்படக் கூடாது, நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக தான் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளதாக பெருமைப்பட்ட தந்தை செல்லமுத்து, மேல் படிப்புக்கு தமிழக மற்றும் கேரள அரசுகள் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கேரள அரசு பள்ளியில் படித்த தமிழக மாணவி ஒருவர், காடுமேடுகளை கடந்து சென்று தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments