சிக்னல்களில் தேங்கும் வாகனங்கள்.. நோய் தொற்று அபாயம்..!
சென்னையில் சிக்னல்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அருகருகே காத்திருக்கும் போது நோய் தொற்று அபாயம் இருப்பதால், 10 முக்கிய சாலை சந்திப்புகளில் ஆயுதப்படை காவலர்கள் மூலம் போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 6-ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுமார் 400 சிக்னல்கள் இயக்கப்படுகின்றன. அதே வேளையில் முக்கிய சாலை தவிர்த்து, போக்குவரத்து குறைவாக உள்ள சாலைகளில் அதுவும் தானியங்கி முறையில் இயக்கப்படும் சிக்னல்களால் தேவையில்லாமல் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன.
சிக்னல் போடப்பட்ட வழியில் செல்வதற்கு எந்த வாகனமும் இல்லாமல், ஒரு நிமிடத்திற்கு மேல் எதிர் திசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அருகருகே நிற்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சிக்னல்களை இயக்கவும், அதுவும் காவலர்கள் முன்னின்று போக்குவரத்தை சீர் செய்யவும் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதே போல், 10 முக்கிய சாலை சந்திப்புகளில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சிக்னல்களில் வாகன ஓட்டிகளை வெகு நேரம் காத்திருக்க வைக்க கூடாது என போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள்,காவலர்களுக்கு அறிவுத்தியுள்ளனர்.
அண்ணா சாலை ஸ்பென்சர், அண்ணா மேம்பாலம், கீழ்ப்பாக்கம் ஈகா சிக்னல், வேளச்சேரி, கிண்டி, அடையாறு உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த 10 சந்திப்புகளில் கூடுதலாக ஆயுதப் படை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு சிக்னல்களில் வாகன ஓட்டிகள் வெகு நேரம் நிற்காமல் போக்குவரத்தை சீர் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
Comments