சரக்கு ரயிலில் வாகனங்களை அனுப்பும் மாருதி சுசுகி... சுற்றுச்சூழலுக்கு விளையும் நன்மைகள் என்ன?

0 6331

ந்திய ரயில்வேயின் உதவியுடன்  கடந்த ஆறு வருடங்களாக மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மற்றும் டிராக்டர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சாலை மார்க்கமாக அனுப்பி வைக்காமல், ரயில்வே துணையுடன் சரக்குகள் அனுப்பி வைக்கப்படுவதால் 3000 மெட்ரிக் டன்  கார்பன்டையாக்ஸைடு வாயு வெளியீடு தவிர்க்கப்பட்டுள்ளது. 10 கோடி லிட்டர் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட  எரிபொருள் மிச்சமாகி  சுற்றுச் சூழலுக்கு நன்மை விளைந்திருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் கூறி உள்ளது.

இது குறித்து மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "2019 - 2020 ம் மட்டும் 1.78 லட்சம் வாகனங்கள் இந்திய ரயில்வே துறை மூலம் அனுப்பி வைத்துள்ளோம். இது கடந்த ஆண்டுக்கணக்குடன் ஒப்பிடுகையில் 15 சதவிகதம் அதிகம் ஆகும். இந்த கணக்கானது, நாடு முழுவதும் விற்பனையான மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகனங்களின் 12 சதவிகிதம் ஆகும்.  இந்தியாவில் பரந்து விரிந்த ரயில்வே உள்கட்டமைப்பைப் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளோம். " என்று தெரிவித்துள்ளது.

image

2014 - ம் ஆண்டில் தான் மாருதி சுசுகி நிறுவனம் முதன் முதலில் இந்திய ரயில்வே துறை மூலம் வாகனங்களை அனுப்பி வைத்தது. இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நெடுஞ்சாலை சரக்குப் பயணங்களை லாரிகள் வழியாக மேற்கொள்வது தவிர்க்கப்பட்டது.

மாருதி நிறுவனத்தின் கார்களை ஏற்றிச் செல்லும் வகையில் ரயில்வேயின் சரக்கு பெட்டிகள் மாற்றியமைக்கப்பட்டன. இதனால், 125 கார்கள் மட்டுமே ஏற்றிச்செல்லும் ஒரு பெட்டியில் 265 கார்கள் ஏற்றி செல்ல முடிந்தது.  மாற்றம் செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் மூலம் இதுவரை 1.4 லட்சம் கார்கள் அனுப்பப்பட்டுள்ளது.  தற்போது 318 கார்களை 95 கி.மீ வேகத்தில் கொண்டு செல்லும் வகையில் சரக்கு வேகன்களின் அமைப்பு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் பாதுகாப்பாக, விரைவாக  கார்களை இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல முடிந்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் தான் நாட்டில் முதல் முதலில் 'ஆட்டோமொபைல் சரக்கு ரயில் ஆபரேட்டர்' லைசன்ஸ் (AFTO) பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த உரிமையானது  ரயில்வே நெட்வொர்க்கில் அதிவேக, அதிக திறன் கொண்ட டிரான்ஸ்போர்ட் ரயில்களை உருவாக்கி இயக்க அனுமதி அளித்துள்ளது. தற்போது பல்வேறு  நிறுவனங்களும் இந்திய ரயில்வே மூலம் சரக்குகளை நாடு முழுவதும் அனுப்பி வைக்கின்றனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்  கோயல் சமீபத்தில் கியா கார் மற்றும் ஸ்வராஜ் டிராக்டர்களை  சரக்கு ரயில்  மூலம் அனுப்பி வைக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரயில்வே துறையும், தனியார் நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுவதால் இரு தரப்புக்குமே லாபம் கிடைக்கிறது. மேலும், சுற்றுச் சூழலுக்கும் மிகப்பெரிய  நன்மை விளைகிறது.  
 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments