பெண்களிடம் அத்துமீறல்.. காவல் ஆய்வாளருக்கு கட்டாய பணி ஓய்வு..! டிஐஜி அதிரடி நடவடிக்கை

0 19427

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கட்டாயப் பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க காவல் நிலையம் வரும் பெண்களின் தொடர்பு எண்களை வாங்கிக் வைத்துக் கொண்டு வக்கிரமாக பேசியவரின் வாய்ஸ் நிறுத்தப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மணிவண்ணன் தான், கட்டாய ஓய்வில் பணியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்.

திருச்சி பொன்மலை, பெரம்பலூர் டவுன் மற்றும் திருச்சி சிறுகனூர் ஆகிய இடங்களில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவர் மணிவண்ணன். தன்னிடம் புகார் அளிக்கவரும் பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் விசாரணை என்ற பெயரில் வரம்பு மீறிப் பேசுவது இவரது வழக்கம் என்றும், இவருக்கு ஒத்துழைக்காத பெண்களுக்கு தொல்லை கொடுப்பதோடு, புகாருக்குள்ளான நபர்களுக்கு சாதகமாக வழக்கை முடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. மணிவண்ணன் மீது, பெண் போலீசாரிடம் வக்கிரமாக பேசுவது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் உயரதிகாரிகளிடம் கூறப்பட்டுள்ளன.

அண்மையில் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற பெண் ஒருவரின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் வக்கிரமாகப் பேசி தொல்லை கொடுத்ததோடு, புகார் கூறப்பட்டிருந்த நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அப்போதைய திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனிடம் நேரடியாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது எழுந்த புகார் குறித்து டிஐஜி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். இதில் அவர் அந்த ஒரு பெண்ணிடம் மட்டும் அல்ல பலரிடம் இதுபோல வம்பு செய்து வந்ததை கண்டறிந்தார். காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தவறிழைத்தது உண்மை என்று உறுதியானதும், கடந்த ஜூன் 29 ம் தேதி இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு அளித்து அவரை காவல் பணியில் இருந்து விடுவித்து அனுப்ப டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த 30 ந்தேதி டிஐஜி பாலகிருஷ்ணன் மாற்றலாகி சென்று விட்டதால் கட்டாய ஓய்வு உத்தரவில் இருந்து தப்பிவிடலாம் என்ற எண்ணத்தில் சிறுகனூர் காவல் நிலைய பணிக்குச் சென்ற காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் கட்டாயப் பணி ஓய்வு உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.

காவல் ஆய்வாளர் மணிவண்ணன் , ஓய்வு பெற இன்னும் 6 ஆண்டுகள் இருக்கும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

காவல்துறையினர் தவறிழைத்தால் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்வதுதான் தண்டனையா? என கேள்வி எழுப்புவோருக்கு, காவல் துறையில் இருப்பவர் தவறிழைத்தது உறுதியானால் வேலையே பறிபோய்விடும் என எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த நடவடிக்கை...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments