சத்தியம் செய்து தப்பித்த 5 குண்டா போலீஸ் கைதானது எப்படி..?

0 12197

சாத்தான்குளம் வியாபாரிகள் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தியம் செய்து தப்பியவர்கள் ரேவதியின் சாட்சியத்தால் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தனித்தனியாக இரு கொலை வழக்குகள் பதிவு செய்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தாக்குதலுக்கு மூலக்காரணமாக இருந்த சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் தற்போது மதுரை மத்திய சிறையில் தனி வீட்டில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை சேர்ந்த 5 பேர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த கொடூர கொலை சம்பவங்களுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல ஊராரிடம் சத்தியம் செய்து தப்பி வந்த குண்டா போலீஸ் 5 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லதுரை, சாமதுரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய ஐந்து பேரும் சம்பவத்தன்று இருவர் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக காவலர் ரேவதி அளித்த சாட்சியத்தில் தெரிவித்திருந்ததாகவும் அதன்பேரில் அன்று பணியில் இருந்த அனைவரிடமும் விசராணை நடத்தப்பட்டு தாக்குதலில் பங்குள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த 5 போலீசாரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பிரண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் அளித்த சாட்சியத்தில் சம்பவத்தின் போது காவல் நிலையத்தை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்ததாக இந்த 5 போலீசாரின் பெயர்களையும் சுட்டிக் காட்டியதாக கூறப்படுகின்றது.

இருந்தாலும் தங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சிபிசிஐடி போலீசிடம் மறுத்து வந்த நிலையில், காவல் நிலையத்தில் அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் சிலவற்றின் மூலம் 5 பேரும் தாக்குதலின் போது காவல் நிலையத்தில் இருந்தது உறுதியானதாக கூறப்படுகின்றது.

மேலும் மீண்டும் காவலர் ரேவதியை விசாரணைக்காக அழைத்த சிபிசிஐடி காவல்துறையினர், கொலை சம்பவத்தில் 5 போலீசாரின் தொடர்பு குறித்து முக்கிய தகவல்களை உறுதிபடுத்திக் கொண்டு இந்த 5 பேரின் பெயர்களையும் கொலை வழக்கில் சேர்த்ததையடுத்து, கைது நடவடிக்கை பாய்ந்ததாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 5 பேரும் முகத்தை மூடியபடியே வெளிவந்தனர், செய்தியாளர்கள் படம் பிடித்து விடகூடாது என்று அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளை தாண்டி குதித்து வாகனங்களில் சென்று ஏறினர்.

மருத்துவபரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கு எஸ்.எஸ்.ஐ பால்துரை, தனக்கு சுகர் இருப்பதால் ஜெயிலில் அடைக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பால்துரை, பிரான்சிஸ் தாமஸ் ஆகிய இருவரும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

செல்லதுரை, சாமதுரை, வெயில்முத்து ஆகியோர் நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொர்ந்து பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரு கொலை வழக்குகளில் ஒரே காவல் நிலையத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது இந்திய காவல்துறை வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments