பல்கலை. தேர்வு, நீட், JEE தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிகள்
பல்கலைக்கழகத் தேர்வு, நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தேர்வெழுதும் அனைவரும் செல்பேசியில் ஆரோக்கிய சேது செயலியைக் கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். தேர்வு நடைபெறும் அறையில் சுவர், கதவு, ஜன்னல், மேசை, தரை என்று அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளித்துத் தூய்மைப்படுத்த வேண்டும். தேர்வெழுதும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். போதிய இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும்.
தேர்வறைக் கண்காணிப்பாளர்களாகச் செயல்படுவோர் சுய உறுதிமொழிப் படிவத்தை வழங்க வேண்டும். தேர்வெழுதும் மாணவர்களுக்குக் கட்டாயம் உடல் வெப்பநிலை கண்டறியும் பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல், இருமல், சளி ஆகிய அறிகுறி உள்ள மாணவர்களுக்குத் தனி அறை ஒதுக்க வேண்டும் அல்லது மற்றொரு நாளில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என வழிகாட்டு நெறிகளில் குறிப்பிட்டுள்ளது.
Comments