சாத்தான் குளம் தந்தை, மகன் வழக்கில் டெல்லி சிபிஐ விசாரணையை தொடங்கியது
சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் விவகாரத்தில் டெல்லி சிபிஐ தனித்தனியாக இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதால் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு பரிந்துரைக்கப்பட்டாலும், சாட்சியங்கள் கலைக்கப்படாமல் இருக்க அதுவரை மாநில புலனாய்வு அமைப்பான சிபிசிஐடி விசாரிக்கும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிரடியாக சம்மந்தப்பட்ட காவல் துறையினர் 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு பரிந்துரையை ஏற்று சிபிஐ தனித்தனியாக இரு வழக்குகளை பதிவு செய்துள்ளது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி முதலில் பதிவு செய்யப்பட்ட 2 முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து, டெல்லி சிபிஐ இரு வழக்குகளை பதிவு செய்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 176 1(a)1 என்ற பிரிவின் அடிப்படையிலேயே தான் சிபிஐ வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
அதில் சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் என்ற சந்தேகப்படுகிற குற்றங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சிபிசிஐடி பதிவு செய்த கொலை வழக்கு பிரிவை சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கவில்லை.
அது தான் சிபிஐ-யின் நடைமுறை என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் குழு தமிழகம் வருவார்கள் என கூறப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை செய்து சேகரித்து வைத்திருந்த ஆதாரங்களையும் வாக்குமூலங்களையும் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு அடுத்த கட்டமாக இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற சிபிஐ திட்டமிட்டுள்ளது.
பொதுவாக குற்றச்சாட்டில் மாநில போலீசார் சம்மந்தப்பட்டிருந்தால், வழக்கு நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காக அம்மாநிலத்தில் செயல்படும் மத்திய புலனாய்வுக்கு இவ்வழக்கு ஒப்படைக்கப்பட மாட்டாது.
தமிழகத்தில் சென்னை, மதுரை மண்டலத்தில் சிபிஐ அலுவலகம் செயல்படுகிறது. இருப்பினும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை டெல்லி சிபிஐ அதிகாரிகள் தான் வழக்கு பதிந்து விசாரித்தார்கள்.
அதே போல் போலீசார் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை டெல்லி சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Comments