சாத்தான்குளம்: மேலும் ஒரு கொலைக் குற்றச்சாட்டு
சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்கியதில் தனது மகன் உயிரிழந்ததாகக் கூறி வடிவு என்பவர் தொடுத்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலர், தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளத்தைச் சேர்ந்த வடிவு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் மே 23ஆம் தேதி தனது மகன் மகேந்திரனைப் பிடித்துச் சென்று 2 நாட்கள் காவல்நிலையத்தில் வைத்து அடித்து உதைத்துச் சித்திரவதை செய்ததாகவும், அதனால் உடல்நலம் பாதித்த மகேந்திரன் ஜூன் 13ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மகேந்திரன் உயிரிழப்புக்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரித் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து முறையாக விசாரிக்கவும், தனக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யக் காலஅவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்துத் தமிழக உள்துறைச் செயலர், தமிழகக் காவல்துறைத் துறைத் தலைமை இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Comments