உ.பி.யில் ஒரு சாத்தான்குளம் ... 8 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் 55 காவலர்கள் கூண்டோடு மாற்றம்!
உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே சௌபேபூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த டி.எஸ்.பி உள்ளிட்ட 8 போலீஸாரை விகாஷ் துபே என்ற தாதாவின் கும்பல் சுட்டுக் கொன்றது. இந்த கும்பலை பிடிக்க 25 தனிப்படைகளை நியமித்தும் எந்த பலனும் இல்லை. இதற்கிடையே, ஃபரீதாபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விகாஷ் துபே பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. போலீஸார் அங்கு செல்வதற்குள் விகாஷ் துபே தப்பி விட்டார். ஹோட்டலில் விகாஷ் து துபே நிற்பது போன்ற காட்சிகள் சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.
ஏற்கெனவே, விகாஷ் துபேவுடன் தொடர்பில் இருந்த சௌபேபூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் வினய் திவாரி மற்றும் மூன்று போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சௌபேபூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 55 போலீஸாரையும் கூண்டோடு மாற்றி உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. தங்கள் பணியில் விசுவாசமாக இல்லை என்று குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் ஆயுதப்படை போலீசுக்கு மாற்றப்பட்டனர்.
விகாஷ் துபேவின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபே என்பவரை உத்தரபிரதேச அதிரடிப்படை போலீஸார் இன்று ஹமீர்பூரில் சுட்டுக் கொன்றனர். இதற்கு முன்னதாக, விகாஷ் துபேவின் கும்பலை சேர்ந்த அதுல் துபே, பிரேம் பிரகாஷ் ஆகியோரை போலீஸார் சுட்டுக் கொன்றிருந்தனர்.
விகாஷ் துபே கும்பலால் கொல்லப்பட்ட டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா எழுதியதாகக் கூறப்படும் கடிதம் சமூக வலைத் தளத்தில் வைரலாகியது. அதில், ''கடந்த மார்ச் 14- ந் தேதியிட்ட அந்த கடிதத்தில் சௌபேபூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் வினய் திவாரி தாதா விகாஷ் துபே கும்பலுடன் தொடர்பில் இருக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கான்பூர் அதிரடிப்படை பிரிவின் எஸ்.பி ஆனந்த் தியோவுக்கு வேண்டுகோள் எடுத்துள்ளார். கடிதம் எழுதப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், சௌபேபூர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அத்தனை போலீசாரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
Comments