உன்னய எனக்கு ரொம்ப புடிக்கும்.. ஆபீசரின் கொரோனா காதல்..!

0 13388

தமிழகத்தில், சென்னை இராயபுரம் மண்டலத்தை கொரோனா உலுக்கி வரும் நிலையில் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டிய மாநகராட்சி அதிகாரி ஒருவர், தன்னார்வலராக பணிக்கு வந்த கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த குரல் பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று நோய் கண்டறியும் மைக்ரோ குழுவில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தன்னார்வ பணிகளை, கல்லூரி மாணவ, மாணவிகளும் மேற்கொள்கின்றனர்.

அந்தவகையில், சென்னை ராயபுரம் மண்டலத்தில், மண்ணடி தம்பு செட்டி தெருவில் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தன்னார்வலரான கல்லூரி மாணவி ஒருவருக்கு, அதேபகுதியில் மாநகராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி வரும் கமலக்கண்ணன் காதல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

கல்லூரி மாணவியை அழகாக இருப்பதாகவும் அவரது டிக் டாக் வீடியோக்களை பார்த்து ரசித்ததாகவும் புகழ்ந்த கமலக்கண்ணன், இரண்டு வருடங்களுக்கு முன்பு உன்னை பார்த்திருந்தால் திருமதி கமலக்கண்ணன் ஆகியிருப்பாய் என காதலில் உருகும் ஆடியோ வெளியாகி உள்ளது.

பிடி கொடுக்காமல் பேசும் அந்த மாணவியிடம், தான் யார் தெரியுமா? மாநகராட்சி ஏ.இ என்றால் போலீஸ் ஏ.சி மாதிரி என்றும், தான் மாதம் 78 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், ஜம்பம் அடித்த கமலக்கண்ணன், அப்படி என்றால் நீ எப்படி இருக்கலாம் நினைத்துக் கொள் என ஆசைவார்த்தை கூறி வலை விரித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி புகாரளித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஏராளமான மாநகராட்சி அதிகாரிகள் நேரம் காலம் பார்க்காமல் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களின் பணிக்கு களங்கம் ஏற்படுத்துவது போல கமலக்கண்ணனின் செயல் அமைந்திருப்பதாக சக அதிகாரிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு போலீசார் விசாரித்து வரும் நிலையில், உதவி பொறியாளர் கமலகண்ணனை நேரில் அழைத்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்தனர்.

விசாரணை முடிவில் உதவி பொறியாளர் கமலகண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் காதல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments