தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய 3-வது மத்தியக் குழுவினர் இன்று மீண்டும் வருகை தர உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும், 71 ஆயிரம் பேர் குணமடைந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவை மத்திய அரசு 3வது முறையாக தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்தக் குழு பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று மாலை சென்னைக்கு வருகின்றனர். தமிழகத்தில் 3 நாட்கள் தங்கியிருந்து வைரஸ் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். இந்தக் குழுவில் மத்திய அரசு பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளான ஆர்த்தி அகுஜா, சுபோத் யாதவா, மத்திய அரசில் பணியாற்றும் தமிழக ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்திர ரத்னூ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் இரு மருத்துவ நிபுணர்களும் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் குழுவினர் தங்களின் ஆய்வை முடித்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை #TamilNadu | #CoronaVirus | #Covid19 | #CentralGovt https://t.co/fpJOYWriZq
— Polimer News (@polimernews) July 8, 2020
Comments