நேபாள பிரதமர் சர்மா ஒலிக்கு ஆதரவாக களம் இறங்கிய சீன தூதர்
நேபாளத்தில் பிரதமர் கேபி.சர்மா ஒலியை பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கும் அவரது கட்சியின் முக்கிய தலைவர்களிடம் சீன தூதர் ஹோ யாங்கி சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜாலா நாத் கனால், மாதவ் குமார் நேப்பாள் உள்ளிட்டோரை அவர் சந்தித்து, பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராக செயல்பட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேபாள குடியரசு தலைவர் பித்யா தேவி பண்டாரியையும் அவர் சந்தித்துள்ளார். அதே சமயம் சர்ம ஒலியை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதில் தீவிரமாக இருக்கும் முன்னாள் பிரதமர் பிரசண்டா, சீன தூதரை சந்திக்க தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய வரைபடம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளவராக கருதப்படும் பிரதமர் சர்மா ஒலியை காப்பாற்ற, நேபாளத்தின் உள் விவகாரங்களில் சீன தூதர் ஈடுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Comments