'குரங்குகள் துன்புறுத்தப்படுகின்றன' - பீட்டாவின் குற்றச்சாட்டால் தாய்லாந்து தேங்காய்களைப் புறக்கணிக்கும் ஐரோப்பியர்கள்!

0 4837

'தாய்லாந்தில் தேங்காய் பறிக்க மனிதாபிமானமற்ற முறையில்  குரங்குகள் துன்புறுத்தப்படுகின்றன' என்ற பீட்டாவின் குற்றச்சாட்டால் மேற்கத்தியச் சில்லறை விற்பனையாளர்கள் தாய்லாந்து நாட்டின் தேங்காய் தயாரிப்புப் பொருள்களைப் புறக்கணிக்கத் தொடங்கி உள்ளனர்.

தாய்லாந்து  நாட்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதில் முக்கிய பங்கு குரங்குகளுக்கும் உண்டு. தேங்காய் பறித்தல், தோட்ட வேலை உள்ளிட்ட பணிகளைச் செய்யும் குரங்குகளைப் பார்ப்பதற்கென்றே பலர் தாய்லாந்துக்குச் செல்வதுண்டு.  சுற்றுலா மற்றும் தோட்டத் தொழிலில் குரங்குகள் பயன்படுத்தப்படுவதற்கு பீட்டா அமைப்பு நீண்ட காலமாகவே எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

"காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் குரங்குகள் பிடித்துவரப்பட்டு கட்டாயமாக ஒரு நாளைக்கு 1000- க்கும் மேற்பட்ட தேங்காய்களைப் பறிக்கக் கட்டாயப்படுத்தப் படுகின்றன. தாய்லாந்தில் குரங்குகள் தேங்காய் பறிக்கும் இயந்திரமாகப் பார்க்கப்படுகிறது" எனும் பீட்டாவின் குற்றச்சாட்டு மேற்கத்திய - தாய்லாந்து வணிகத்தில் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்தில் ஆரோ - டி, சாக்கோ எனும் இரண்டு முன்னணி நிறுவனங்கள்  தான் தேங்காய் உற்பத்திப் பொருள்களை அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. பீட்டாவின் இந்த குற்றச்சாட்டு இரு நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாக்கி உள்ளது.

பீட்டாவின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து 15,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் குரங்குகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் தாய்லாந்திலிருந்து தேங்காய் பொருள்களை வாங்குவதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

பீட்டாவின் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் தாய்லாந்து நாட்டின் வர்த்தக அமைச்சர் ஜூரின் லக்சனாவிசிட், "பட்டாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டானது பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தைப் பாதித்திருக்கிறது. குரங்குகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மாறாக, தொழில் ரீதியாகப் பயன்படுத்தப்படுவது இல்லை" என்று பதில் அளித்தார்.

தாய்லாந்து 2019 - ம் ஆண்டில் மட்டும் ஐரோப்பிய யூனியனுக்கு 395 மில்லியன் டாலர் அளவுக்கும் பிரிட்டனுக்கு 71 மில்லியன் டாலருக்கும் தேங்காய்ப்பாலை ஏற்றுமதி செய்தது. பீட்டாவின் எதிர்ப்பு மற்றும் தொடர் பிரச்சாரத்தால் ஏற்றுமதியில் சரிவை சந்திக்கும் நிலையை அடைந்திருக்கிறது தாய்லாந்து!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments