'பாலுடன் சிறிது மஞ்சள் சேர்த்துக்குடி' - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எளிய மகத்துவமான 'டிஷ்'கள்!

0 35477

ர்வதேச அளவில் வீரியமாகப் பரவி வருகிறது, கொரோனா நோய்த்தொற்று.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக்கொள்வது  மட்டுமே நம்மை  தற்காத்துக் கொள்ளும் ஒரே வழி என்கிறார்கள் மருத்துவர்கள். மாத்திரைகள் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தினாலும், பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. உணவுப் பொருள் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்குவது மட்டுமே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

உடல் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதில் மஞ்சள் முக்கிய பங்காற்றுகிறது. மிகச்சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படும் மஞ்சள், பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொண்டதும் கூட. அதனால் தான் நம் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது மஞ்சள்.

மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணம். இந்த குர்க்குமின் ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கும். ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமலும் தடுக்கும். பாக்டீரியாக்களின்  தாக்குதலையும் முறியடிக்கும். இதனால் தான், மஞ்சளின் மகத்துவத்தை அறிந்த நம் முன்னோர்கள் உணவுப் பொருள்களில் அதிகளவில் மஞ்சளைச் சேர்த்துக்கொண்டனர். ரசம், குழம்பு, சூப்பு என்று எதுவானாலும் துளியளவு மஞ்சள் சேர்த்தால் தான் மனம் நிறைவு பெறும்.

image

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி ஆரோக்கியத்தை வழங்கும் மஞ்சளை அடிப்படையாகக் கொண்ட உணவுப்பொருள்கள் சிலவற்றை அறிந்துகொள்வோம். எளிய முறையில் வீட்டிலேயே தயார் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வோம்!

மஞ்சள் பால்

’வெறும் பாலைக் குடிக்காமல், சிறிது  மஞ்சள் தூள் சேர்த்துக்குடி’ என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஒரு கிளாஸ் பாலில் கால் டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும்.  பிறகு,  பாலை வடிகட்டி, தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து இளம் சூடாகக் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. தூங்குவதற்கு முன்பு மஞ்சள் பால் பருகினால், அதிக பலன்களைப் பெற முடியும்.

மஞ்சள் பாலை தினமும் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தோல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். மஞ்சளில் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை இருப்பதால் சளி, இருமல் பிரச்னை நீங்கும், சைனஸ் பிரச்னை சரியாகும்.

மஞ்சள் தண்ணீர்

தினமும், காலையில் எழுந்ததும் மஞ்சள் தண்ணீர் குடிப்பதென்பது சற்றே சலிப்பை ஏற்படுத்தும். ஆனால், மஞ்சள் தண்ணீர் குடித்து அதன் பலனை உணரத் தொடங்கிவிட்டால், குடிப்பதை நிறுத்தமாட்டீர்கள். உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கு அமிர்தம் போன்றது மஞ்சள் தண்ணீர்.

தண்ணீரை நன்கு சுடவைத்து, அதில் சற்றே துளசி மற்றும் மஞ்சள் பொடியைச் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் பருக வேண்டும். இந்தச் சுவை பலருக்கும் பிடிக்காது. அதனால், இத்துடன் சற்றே தேன், கருப்பட்டியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தினமும் காலையில் மஞ்சள் தண்ணீர் குடித்துவந்தால் அந்த நாளே உற்சாகமாக மாறிவிடும். சளித்தொல்லை நீங்கும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆஸ்துமா பிரச்னை நீங்கும். அல்சர், அசிடிட்டி ஆகியவையும் சரியாகும்.

image

மஞ்சள் சூப்பு

நாம் வழக்கமாகச் சாப்பிடும் தக்காளி, காளான், கோழி, ஆட்டுக்கால் சூப்புடன் மஞ்சள் கலந்து சாப்பிட்டால் அபரிமிதமான நன்மைகள் ஏற்படும். வழக்கமாக சூப்பு வைத்து முடித்ததும் சற்றே அதிகமாக மஞ்சள் சேர்த்து, நன்கு கலக்கிவிட்டு ஒருமுறை கொதிக்கவைத்துப் பருகவும்.

அவ்வப்போது, மஞ்சள் சூப் பருகுவதன் மூலம் சுவாசப் பிரச்னைகள் நீங்கும். உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

மஞ்சள் டீ

பால் குடிக்கும் பழக்கத்தைவிடவும் டீ குடிக்கும் பழக்கமே நம்மில் பலருக்கும் உண்டு. டீ பிரியர்களுக்கானது தான் இந்த மஞ்சள் டீ. வழக்கமான முறைப்படி டீ தயாரித்ததும் இறுதியாக சற்றே மஞ்சள் பொடி சேர்த்து டீ குடித்துவந்தால் மன அழுத்தம் முற்றிலும் விலகிவிடும். இஞ்சி டீ குடிப்பவர்களும் மஞ்சள் சேர்த்துக் குடிக்கலாம். இஞ்சியுடன் மஞ்சள் சேரும் போது பல்வேறு நன்மைகள் உடலுக்கு ஏற்படும்.

மஞ்சள் டீ கல்லீரலைப் பாதுகாக்கும். செரிமான பிரச்னைகளைப் போக்கும். சளி மற்றும் தீராத இருமலால் அவதிப்படுபவர்கள் மஞ்சள் டீயை நிச்சயம் பயன்படுத்தலாம்.

கோவிட் - 19 க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை, நோய் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது மட்டுமே ஓரே தீர்வு. அதனால், மஞ்சளை அதிகளவில் உணவுப் பொருள்களில் எடுத்துக்கொண்டு கொரோனா நோயை விரட்டியடிப்போம். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments