அடி தாங்காமல் விஷம் குடித்த இளைஞர்; 'திடீர்' டாக்டர்களான போலீஸார்! ஊர்க்காவல் படை வீரர் மீதும் புகார்

0 17536
போலீஸால் தாக்கப்பட்ட இளைஞர் ரகுநாத்

திருச்சி மாவட்டம் துறையூர் கொல்லம்பட்டியை சேர்ந்த இளைஞர் ரகுநாத். கேரளாவில் பணி புரிந்து வந்துள்ளார். கொரோனா லாக்டௌன் காரணமாக,  சொந்த ஊர் திரும்பியுள்ளார். கடந்த ஜூன் 5- ந் தேதி, வியாபாரிகளை மிரட்டியதாக ரகுநாத்தை துறையூர் போலீஸார் பிடித்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து சராமரியாக தாக்கியுள்ளனர்.. வலியால் துடித்த ரகுநாத் போலீஸ் நிலையத்தில் இருந்த ஆல் அவுட் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். 

விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்னையாகி விடும் என்று பயந்த போலீஸார், அவர்களே மருத்துவர்களாகியுள்ளனர். ரகுநாத்துக்கு உப்பு , சோப்பு கலந்த கரைசலை கொடுத்து விஷத்தை வாந்தி எடுக்க வைத்துள்ளனர். பின்னர், ரகுநாத்தின் உடல் நிலை மோசமடைந்ததால் வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் விஷயம் வெளியே தெரிந்து விடுமென்பதால், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்துள்ளனர். ரகுநாத்தின் உடல் நிலை தேறியதும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.image

ஜூன் 27- ந் தேதி ஜாமீனில் வெளிவந்த ரகுநாத் , தன்னை  தாக்கியதாக துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன் உள்ளிட்ட போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் சுப்பரமணியம் மீது மனித உரிமை ஆணையம் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு டி.ஜி.பி மற்றும் ஐ.ஜி. டி.ஐ.ஜி ஆகியோருக்கு ரகுநாத் புகாரளித்துள்ளார். ஏற்கனவே, ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் , ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் மீதும் புகார் சொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரகுநாத்திடம் பேசிய போது, '' கேரளாவில் கூலி வேலை பார்த்தேன். கொரோனா என்பதால் சொந்த ஊர் திரும்பி விவசாயத்துல ஈடுபட்டேன். ஜூன் 5-ந் தேதி வீட்டுக்கு வெளியே படுத்திருந்தேன். இரவு 2 மணிக்கு துறையூர் போலீஸ்காரர் என்னை வந்து எழுப்பினார். என்னை சட்டையை பிடித்து இழுத்து ஜீப்பில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அடுத்த நாள் காலை இன்ஸ்பெக்டர் குருநாதன் கண் முடித்தனமாக அடித்தார். ஊர்க்காவல் படை வீரர் சுப்ரமணியத்தோட தூண்டுதல் பேரில்தான் என்னை பிடிச்சுடடு போனாங்க. அவரோட பெயரை சொல்லிதான் என்னையும் அடிச்சாங்க. என்னோட சாதியையும் தரக்குறைவாக பேசினர். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் போலீஸ் நிலையத்தில் இருந்த ஆல் அவுட் பாட்டிலில் இருந்த விஷத்தை எடுத்து குடிச்சிட்டேன். image

பக்கத்துல இருந்த இன்னோருத்தரு  நான் விஷம் குடிச்சதை போய் போலீஸ்காரங்கட்ட சொன்னார். சிகிச்சைக்கு பிறகு, துறையூர் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தினர். அதுக்கு முன்னாடி , 'நீதிபதிட்ட போலீஸ்காரங்க அடிச்சாங்களானு கேட்டா இல்லனு சொல்லனும்' னு மிரட்டினாங்க. அதனால், அவங்ககிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு நாங்களும் ஜட்ஜ் கேட்ட போது, இல்லனு சொல்லிட்டோம். இப்போ எங்க மேல , கூட்டுக் கொள்ளையில் ஈடுபட ஆயுதங்கள் வச்சிட்டு பதுங்கியிருந்ததாக வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க. என்னை பார்த்து ' குண்டர் சட்டத்தில் உன்னை உள்ளே தள்ளாம விட மாட்டோம்' போலீஸ்காரங்க மிரட்டினாங்க. பின்னர் சிறையிலிருந்த எனக்கு ஜூன் 27 - ந்தேதி ஜாமீன் கிடைத்தது. வெளியே வந்தவுடன் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம்'' என்றார்.

இது குறித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் பேசிய போது, இன்ஸ்பெக்டர் குருநாதன் விடுமுறையில் இருப்பதால் அவரின் செல்போன் ஸ்விட்ச் - ஆப் செய்யப்பட்டுள்ளது என்று அங்கிருந்த பெண் காவலர் தெரிவித்தார். தற்போது துறையூர் போலீஸ் நிலைய பொறுப்பாளரான  சப் -இன்ஸ்பெக்டர் ராஜாவிடத்தில் இந்த சம்பவம் குறித்து கேட்ட போது, ''குற்றம் சாட்டப்பட்ட ரகுநாத் மீது கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து வியாபாரிகளை மிரட்டியதாக புகார் வந்தது. அதனால் வழக்குப்பதிவு செய்து விசாரித்தோம். மற்றபடி, ரகுநாத் சொல்வது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை '' என்று மறுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments