சீன எல்லையில் இந்தியாவின் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ரோந்து

0 4676
சினூக் ரக ஹெலிகாப்டர்களும், மிக் 29 ரக விமானங்களும் நள்ளிரவில் கண்காணிப்பு பணியில் தீவிரம்

இந்திய-சீன எல்லை அருகே, முன்களப் பகுதியில் இந்தியாவின் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், கனரக சினூக் ஹெலிகாப்டர்கள், மிக்-29 ரக போர் விமானங்கள் நள்ளிரவிலும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களையும், 15 சினூக் ஹெலிகாப்டர்களையும் வாங்க, இந்தியா - அமெரிக்கா இடையே 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலையில் கையெழுத்தானது.

இதில், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், நிலத்திலும், வானிலும் சீன அச்சுறுத்தலுக்கு அதிரடி பதிலடியாகக் கருதப்படுகின்றன. ஆயுதந் தாங்கிய வீரர்களை ஏற்றிச் செல்ல பயன்படுவதோடு, டாங்குகளையும் தாக்கி அழிக்கும் திறனும் பெற்ற அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், இரவு நேரத்திலும் போரில் பயன்படுத்தும் திறன்வாய்ந்தவை. வளைந்து, நெளிந்து, விரைந்து திருப்பி இயக்குவதற்கு ஏற்றவை, எதிரிகளின் கண்ணில் மண்ணைத் தூவும் வகையில் மிகவும் தாழப்பறந்து, செடிகொடிகளுக்குள் மறைந்து நிற்க ஏற்றவை.

எதிரிகளை அழித்தொழிக்கும் போர் எந்திரம் என வர்ணிக்கப்படும் அப்பாச்சி ஹெலிகாப்டரில், 2 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் 1200 ரவுண்டுகள் சுடும் பீரங்கி துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. ஹெல்ஃபயர் உள்ளிட்ட ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன்பெற்றவை.

எதிரிகளின் 128 இலக்குகளை கண்காணித்து, அதில் முதன்மையான அச்சுறுத்தல் எது என்பதைக் கண்டறிந்து, 16 இலக்குகளை குறிவைத்து தாக்கக் கூடிய இந்த ஏஹெச்-64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், எந்தவொரு போரிலும் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியவை என கருதப்படுகிறது.

22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா ஆர்டர் செய்ததில், போயிங் நிறுவனம் தயாரித்து தந்த, 17 ஹெலிகாப்டர்கள் கடந்த ஆண்டு படையில் இணைக்கப்பட்டன. இது, ரஷ்யாவிடமிருந்து வாங்கிய பழைய எம்-17, எம்-26 ஹெலிகாப்டர்களை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. மீதமுள்ள 5 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், கடந்த மார்ச்சில் வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பேரிடரால் அது தடைபட்டது.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் 4 இடங்களில் மோதல் போக்கை உருவாக்கியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாரானது.

அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், கனரக சினூக் ஹெலிகாப்டர்களையும் இந்தியா எல்லைக்கு நெருக்கமான தளங்களுக்கு கொண்டு சென்றது. மேலும் போயிங்கை தொடர்பு கொண்டு மீதமுள்ள 5 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டது. ஒப்பந்ததாரர்களுக்கும், பாகங்களை ஒருங்கிணைப்பவர்களுக்கும், தனிமைப்படுத்துதல் விதிகளில் இருந்து விலக்களித்து, சிறப்பு விசா ஏற்பாடு செய்து மத்திய அரசு வரவழைத்தது. அதன்படி கடந்த மாதத்தில் 5 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்தன.

இதேபோல, சினூக் ரக ஹெலிகாப்டர்கள், முன்களப் பகுதிக்கு ராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லவும், ஆயுதங்கள், தளவாடங்கள், கருவிகள், எரிபொருளை கொண்டு செல்லவும் பயன்படுகின்றன.

தற்போது, இந்திய-சீன எல்லை அருகே, முன்களப் பகுதியில், அப்பாச்சி, சினூக் ரக ஹெலிகாப்டர்களும், மிக்-29 ரக போர் விமானங்களும் இரவு நேரத்திலும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments