தூதரகம் பெயரில் பார்சல் .... உள்ளே 30 கிலோ தங்கம்! பினராயி விஜயனின் முதன்மை செயலர் பதவி பறிப்பு

0 21878
ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் மற்றும் ஸ்வப்னா சுரேஷ்

 திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயரில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. மற்றோரு நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடுவதில்லை. இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்றுள்ளார். ஆனால், இப்படி வரும் பார்சல்களில் தங்கம் கடத்துவதாக தகவல் கசிந்தது. தொடர்ந்து , வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இது போன்ற பார்சல்களை சோதனை செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்றனர். அப்படி, திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்ட போது, ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர் துறையில் மேலாளராக பணியாற்றும்  ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, இவர் யு.ஏ. ஈ நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். தங்க கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னாவுக்கு கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளர் வேலை கிடைத்தது எப்படி?என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால்,அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
image

கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முதல்வர் அலுவலகத்துக்கும் தங்க கடத்தலுக்கும் தொடர்பு உள்ளது. தலைமைச் செயலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்க கடத்தலுக்கு துணையாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.  இவருக்கு பதிலாக மீர் மொகமது  நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், சிவசங்கர் ஐ.டி துறை செயலராக தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் , அமீரகத்திலிருந்து வரும் பார்சல்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு போன் செய்துள்ளதாகவும் பல முறை தங்க கடத்தலில் கிங்பின்களில் ஒருவராக கருதப்படும் ஸ்வப்னாவை  காப்பாற்றி விட்டதாகவும் சிவசங்கர் மீது குற்றம் சாட்டியுள்ளன. அதே போல, ஸ்வப்னாவை சிவசங்கர்தான் பதவியில் நியமனம் செய்யதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஸ்வப்னாவின் நியமனம் குறித்து தனக்கு தெரியாது என விளக்கமளித்துள்ளார், இது குறித்து சிவங்கரிடத்தில் கேரள முதல்வர் விளக்கம் கேட்டுள்ளார்.

அமீரகத்திலிருந்து ஒரு முறை தங்கம் கடத்துவதற்கு ஸ்வப்னா ரூ. 25 லட்சம் பெற்றதாக சொல்லப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments