திருச்சி மாணவி எரித்து கொலை : 11 தனிப்படை அமைப்பு
திருச்சி அருகே மர்மமான முறையில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளைப் பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உறவினர்கள் 2 பேரிடம் ஐ.ஜி., டி.ஐ.ஜி., தீவிர விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்டம், அதவத்தூர் கிராமத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி நேற்று வீட்டிற்கு அருகாமையில் உள்ள மர அறுவை ஆலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற நிலையில், காட்டுப்பகுதியில் தீயில் கருகி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்தசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, அந்த மாணவி கடந்த 3 மாத காலமாக அண்ணன் உறவு முறை உடைய செந்தில் என்பவரிடம் செல்போனில் பேசி வந்ததாகவும், அதனை மாணவியின் தந்தை பெரியசாமி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது நோட்டு புத்தகத்தில் மாணவி, செந்திலின் பெயரை எழுதி வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதன் அடிப்படையில், மாணவிக்கு அண்ணன் உறவு முறை வரக்கூடிய உறவினரான செந்திலையும், அவரது நண்பரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். 2 பேரிடமும் சோமரசன் பேட்டை காவல் நிலையத்தில் வைத்து ஐ.ஜி.ஜெயராமன், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதனிடையே மாணவி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 11 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி மணிவண்ணன் தலைமையில், 3 டி.எஸ்.பி.க்கள், ஏழு காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 11 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
கிடைத்த தடயங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையோடு ஒப்பிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி.ஜெயராமன் பேட்டியளித்துள்ளார்.
இதனிடையே, மாணவியின் உடலுக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் உடற்கூடாய்வை வீடியோவாக காவல்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே, மாணவி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? அல்லது உயிரோடு எரித்து கொல்லப்பட்டாரா? என்பது தெரியவரும்
Comments